ஐபிஎல் 2022: மும்பை இந்தியான்ஸிலிருந்து வெளியேறும் ஜெயவர்த்னே?
ஐபிஎல் தொடரை 5 முறை கோப்பை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கியமான நபராக விளங்குபவர் பயிற்சியாளர் மஹிலா ஜெயவர்தனே. அவருடைய பயிற்சியில் தான் அந்த அணி வெற்றிகரமான அணியாக நடைபோட்டு வருகிறது. ஆனால் அவருக்கு தற்போது இக்கட்டான சூழல் வந்துள்ளது.
சமீப காலமாக தேசத்திற்காக விளையாடுவது முக்கியமா? அல்லது ஐபிஎல்-ல் விளையாடுவது முக்கியமா என்ற வாதம் வலுத்து வருகிறது. அதில் தான் தற்போது ஜெயவர்தனே சிக்கியுள்ளார். இலங்கையின் முன்னாள் வீரரான அவர், தற்போது அந்த அணிக்கு திட்டங்களை வகுத்துக் கொடுக்கும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். ஆனால் அதில் அவரால் கவனம் செலுத்த முடிவதில்லை.
இலங்கை அணியின் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய சுற்றுப்பயணத்தின் போது ஜெயவர்தனே அணியுடன் இல்லை. மாறாக காணொளி காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறார். இதன் விளைவு இரு தொடர்களிலும் இலங்கை அணி படு மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஜெயவர்தனே மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுடன் மோதுவது மிகப்பெரிய போட்டியாக இருக்கும். ஆனால் அந்த இடங்களில் ஜெயவர்தனே அருகில் இல்லாததால் வீரர்கள் சிரமப்படுகின்றனர். இதுவே ஐபிஎல் தொடரின் பாதியிலேயே தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறுகிறேன் என்று கூறினால் விட்டுவிடுவார்களா? அல்லது அவர் தான் சென்றுவிடுவாரா என அதிகாரிகள் கொந்தளித்துள்ளனர்.
தேசிய அணியுடன் இருக்க முடியாத ஜெயவர்தனே பணம் கொட்டும் ஐபிஎல்-ல் மட்டும் முழு நேரமும் இருக்கிறார். எனவே அவர் இனி முழு நேர பயிற்சியாளராக இலங்கை அணியுடன் மட்டுமே இருக்க வேண்டும் என அந்நாட்டு வாரியம் கூறவுள்ளதாக தெரிகிறது. இப்படி நடந்தால் மும்பை அணிக்கு பெரும் இடியாக அமையும். ஏனென்றால் இவரின் ஆலோசனைகளின் படி தான் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.