ஒரு போட்டியை வைத்து எதையும் முடிவு செய்ய வேண்டாம் - நிக்கோலஸ் பூரன்!

Updated: Sat, Mar 19 2022 20:45 IST
Image Source: Google

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடத்தின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சந்திக்கிறது. இந்த தொடரில் பங்கேற்று கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் மும்பையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபடத் தொடங்கி உள்ளனர். 

குறிப்பாக நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை தக்க வைப்பதற்காக இதர அணிகளை காட்டிலும் கடந்த வாரத்திற்கு முன்பே குஜராத் மாநிலம் சூரத் நகரில் வலை பயிற்சியை தொடங்கியது.

அதேபோல் இந்த தொடரில் பங்கேற்பதற்காக சமீபத்தில் நடந்த இலங்கை தொடரை முடித்துக்கொண்டு ரோஹித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முக்கிய இந்திய வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைந்துள்ளனர். அவர்களை போல இந்த தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட பல நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் அந்தந்த அணிகளில் இணைய தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் தன்னைக் ஒப்பந்தம் செய்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் தன்னை 10.75 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்த ஹைதராபாத் அணிக்காக முழு மூச்சுடன் விளையாட உள்ளதாக நிக்கோலஸ் பூரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“கடந்த வருடம் ஒரு சீசனில் மோசமாக விளையாடியதற்காக நான் மோசமான வீரர் என அர்த்தமில்லை. சர்வதேச போட்டிகளில் நான் சிறப்பாக செயல்படுவதை அனைவரும் பார்த்தனர். எனவே என்னைப் பொறுத்தவரை என் மீது மிகப் பெரிய முதலீடு செய்துள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு என்னால் முடிந்த அனைத்தையும் கொடுக்க உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த அவர்களுக்காக எனக்குள் இருக்கும் திறமையானவரை காண்பிக்க விரும்புகிறேன்.

அனைவருமே ஒரு சில நேரங்களில் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். அந்த வகையில் கடந்த வருடம் ஒரு போட்டியில் நான் முதல் பந்தில் டக் அவுட் ஆனேன். அடுத்த போட்டியில் 2ஆவது பந்தில் டக் அவுட் ஆனேன். அதன்பின் ஒரு பந்தை எதிர் கொள்வதற்கு முன்பாகவே ரன் அவுட் முறையில் டக் அவுட் ஆனேன். இருப்பினும் அதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. ஆனால் அதன் வாயிலாக நிறைய கற்றுக் கொண்டுள்ள நான் தற்போது நான் ஒரு நல்ல வீரராகவே மாறியுள்ளேன் என நம்புகிறேன்.

ஒரு கிரிக்கெட் வீரராக நீங்கள் சரியாகச் செயல்படாத நேரத்தில் ஊடகங்கள் உங்களை குறிவைக்கும். நிறைய ரசிகர்கள் விமர்சிப்பார்கள். அது போன்ற அம்சங்கள் ஒரு கிரிக்கெட் வீரரை பாதிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு கிரிக்கெட் வீரராக அதையெல்லாம் புறந்தள்ளி விட்டு அந்த வெளிப்புற சத்தங்களை பெரிதுபடுத்தாமல் நமது அணிக்காக சிறப்பாக செயல்பட முயற்சி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை