ஐபிஎல் 2022: சிஎஸ்கே பேட்டர்களை கட்டுப்படுத்திய பாஞ்சாப் பவுலர்கள்; பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி!
ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை வான்கடேவில் இன்று நடந்துவரும் போட்டியில் சிஎஸ்கேவும் பஞ்சாப் கிங்ஸும் ஆடிவருகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் ஆடிவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் ரவீந்திர ஜடேஜா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதனப்டி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 21 பந்தில் 18 ரன்கள் மட்டுமே அடிக்க, பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது பஞ்சாப் அணி. அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு தவானும் பானுகா ராஜபக்சாவும் இணைந்து அடித்து ஆடினர். இருவரும் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 110 ரன்களை சேர்த்தனர். 7-15 ஓவர்களில் இருவரும் இணைந்து 83 ரன்களை குவித்தனர்.
அதிரடியாக ஆடிய தவான் அரைசதம் அடிக்க, டெத் ஓவரில் களத்திற்கு வந்த லிவிங்ஸ்டோன், 19வது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களை விளாசினார். தவானும் அந்த ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். தவான் 59 பந்துகளில் 88 ரன்களை குவிக்க, 20 ஓவரில் 187 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 188 ரன்களை சிஎஸ்கேவிற்கு இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து கடின இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியில் ராபின் உத்தப்பா, மிட்செல் சாண்ட்னர், ஷிவம் தூபே ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தனர்.
அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்த அம்பத்தி ராயூடு தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பின் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார்.
ஆனாலும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த அம்பத்தி ராயூடு 28 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதன்பின் சந்தீப் சர்மா வீசிய 16ஆவது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்களை விளாசியதுடன், அந்த ஓவரில் 23 ரன்களை எடுத்தார்.
அதன்பின் 78 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் அம்பத்தி ராயுடு, ரபாடா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். இதனால் கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி வெற்றிபெற 27 ரன்கள் என்ற கடின இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
கடைசி ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு விளாசிய தோனி, மூன்றாவது பந்தில் சிக்சர் அடிக்க முயற்சித்து விக்கெட்டை இழந்தார். இதனால் சிஎஸ்கேவின் தோல்வியும் உறுதியானது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.