ஐபிஎல் 2022: அக்ஸருடன் விருதைப் பகிர்ந்த குல்தீப் யாதவ்!
நடப்பு ஐபிஎல் சீசனின் 32-வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின. இதில் டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது.
குறிப்பாக டெல்லி வீரர் குல்தீப் யாதவ் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது. அவர், 4 ஓவர்கள் வீசி 24 ரன்களை கொடுத்திருந்தார்.
இருந்தாலும் அந்த விருதை தனது அணியில் உள்ள சக வீரர் அக்சர் படேல் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார் குல்தீப். அவர், இந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பேசிய குல்தீப் யாதவ், "முதலில் எனது நன்றியை எல்லோருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை நான் அக்சர் உடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இன்று அவர் அபாரமாக பந்து வீசி இருந்தார். ரபாடாவோடு நான் நிறைய விளையாடி உள்ளேன். அதனால் அவரது விக்கெட்டை எளிதில் கைப்பற்ற முடிந்தது. ஆனால் நான் இரண்டாவது விக்கெட் வீழ்த்த காரணமாக இருந்தது ரிஷப் பந்த் தான். ரவுண்ட் தி விக்கெட் வந்து பந்தை வீசுமாறு அவர் சொல்லியிருந்தார். அதை செய்தேன் விக்கெட் கிடைத்தது.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த சீசனில் எனக்கு புதியதொரு நம்பிக்கை கிடைத்துள்ளது. எனது ரோல் என்னவென்ற புரிதல் எனக்குக் கிடைத்துள்ளது. நான் சரியான லைன் மற்றும் லெந்தில் பந்தை வீச வேண்டும் என்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறேன். நீண்ட நாட்களுக்கு பிறகு நான் அனுபவித்து பந்து வீசி வருகிறேன். இதற்கெல்லாம் காரணம் ரிஷப் பண்ட்தான்" எனத் தெரிவித்துள்ளார்.
நடப்பு சீசனில் ஆறு போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள குல்தீப் யாதவ், அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியளில் இர்னடாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.