ஐபிஎல் 2022: மும்பைக்கு ஐந்தாவது தோல்வியைப் பரிசளித்தது பஞ்சாப்!
ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள் மோதுகின்றன . இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்தது .சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். மயங்க் அகர்வால் 52 ரன்களிலும், தவான் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கடைசி நேரத்தில் ஜிதேஷ் சர்மா ,ஷாருக்கான் அதிரடி காட்ட, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் களமிறங்கினர். இதில் ஆரம்பம் முதலே ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடினார்.
அதன்பின் 28 ரன்களில் ரோஹித் ஆட்டமிழக்க, அடுத்த ஓவரிலேயே இஷான் கிஷான் 3 ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த டெவால்ட் ப்ரீவிஸ் - திலக் வர்மா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர்.
அதைத்தொடர்ந்து ஆட்டத்தின் 9ஆவது ஓவரை பஞ்சாப் அணியின் ராகுல் சஹார் வீசினார். அதனை எதிர்கொண்ட டெவால்ட் ப்ரீவிஸ் ஒரு பவுண்டரி மற்றும் அடுத்தடுத்து 4 சிக்சர்களை பறக்கவிட்டு ஆட்டத்தின் போக்கை மும்பை பக்கம் திருப்பினார்.
அவருக்கு துணையாக திலக் வர்மாவும் பவுண்டரி, சிக்சர்களை விளாசி அசத்தினார். ஒருகட்டத்தில் மும்பை அணி எளிதாக வெற்றிபெறும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் 49 ரன்களைச் சேர்த்திருந்த டெவால்ட் ப்ரீவிஸ் ஆட்டமிழக்க, 36 ரன்களில் திலக் வர்மாவும் தேவையில்லாமல் ரன் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து வந்த கீரன் பொல்லார்டும் 10 ரன்களில் ரன் அவுட்டாக ஆட்டத்தில் வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனாலும் சூர்யகுமார் யாதவ் களத்தில் இருந்ததால் மும்பை ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர்.
மேலும் மும்பை அணி வெற்றி பெற கடைசி இரண்டு ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் 43 ரன்கள் எடுத்திருந்த சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிச்சியளித்தார். அடுத்து விளையாடிய வீரர்களாலும் இலக்கை எட்டமுடியவில்லை.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
மேலும் நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து கடைசி இடத்திலேயே நீடித்து வருகிறது.