ஐபிஎல் 2022: ஆர்சிபியை 54 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்!

Updated: Fri, May 13 2022 23:27 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இரு அணிகளுக்குமே பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறுவது மிக முக்கியம்.

மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் முதல் ஓவர் முதலே அடித்து ஆட ஆரம்பித்தார். அதிரடியாக ஆடி மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் சிக்ஸர் மழை பொழிந்த பேர்ஸ்டோ, 21 பந்தில் அரைசதம் அடித்தார். தவான் 21 ரன்னிலும், பானுகா ராஜபக்சா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆனால் பேர்ஸ்டோவ் அதிரடியை தொடர்ந்தார். ஹேசில்வுட், சிராஜ், மேக்ஸ்வெல் ஆகியோரின் பவுலிங்கை பொளந்துகட்டினார் பேர்ஸ்டோவ். அதன்விளைவாக பஞ்சாப் அணி பவர்ப்ளேயில் ஆறு ஓவரில் 83 ரன்களை குவித்தது. 29 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 66 ரன்களை விளாசி பேர்ஸ்டோவ் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஒன்றிரண்டு ஓவர்களில் ரன் வேகம் குறைந்தது. 

ஆனால் லிவிங்ஸ்டோன் அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்த லிவிங்ஸ்டோன் 42 பந்தில் 70 ரன்கள் அடித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் லிவிங்ஸ்டோன். இதையடுத்து 20 ஓவரில் 209 ரன்களை குவித்து பஞ்சாப் கிங்ஸ்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஆர்சிபி அணியில் விராட் கோலி தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி ஸ்கோர் குவிக்க முயற்சித்தார். ஆனால் 20 ரன்கள் எடுத்திருந்த கோலி ரபாடா பந்துவீச்சில் துரதிர்ஷ்டவசமாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதன்பின் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ், லாம்ரோர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து அதிர்ச்சியளித்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த கிளென் மேக்ஸ்வெல் - ராஜத் படித்தர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

ஆனால் 26 ரன்களில் படித்தர் ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கிளென் மேக்ஸ்வெல் 35 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அணியின் நம்பிக்கையாக இருந்த தினேஷ் கார்த்திக்கும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை மட்டுமே எடுத்தது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை