ஐபிஎல் 2022: பஞ்சாப்பிடம் வீழ்ந்தது சிஎஸ்கே; ஹாட்ரிக் தோல்வியால் ரசிகர்கள் வருத்தம்!

Updated: Sun, Apr 03 2022 23:29 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான மயன்க் அகர்வால், முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார். ஆனால் 2வது பந்திலேயே அவுட்டாகி வெளியேறினார். முதல் ஓவரில் மயன்க் அகர்வால் அவுட்டாக, 2வது ஓவரில் பானுகா ராஜபக்சா 9 ரன்னில் ரன் அவுட்டானார்.

14 ரன்களுக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் அதிரடியாக ஆடி 27 பந்தில் அரைசதம் அடித்தார். ஷிகர் தவான் 33 ரன்னில் ஆட்டமிழக்க, 32 பந்தில் 60 ரன்கள் அடித்து லிவிங்ஸ்டோனும் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு தவானும் லிவிங்ஸ்டோனும் சேர்ந்து 95 ரன்களை குவித்தனர். அதன்பின்னர் அறிமுக வீரர் ஜித்தேஷ் ஷர்மா 17 பந்தில் 3 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் அடித்தார். 

பஞ்சாப் கிங்ஸ் அணியின் 2 பவர் ஹிட்டர்களான ஷாருக்கான் (6) மற்றும் ஒடீன் ஸ்மித் (3) ஆகிய இருவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றமளித்ததால், முதல் 10 ஓவரில் 109 ரன்களை குவித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 180 ரன்கள் மட்டுமே அடித்தது.

181 ரன்கள் என்ற சவாலான இலக்கை சிஎஸ்கேவிற்கு நிர்ணயித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ். கேகேஆருக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி, பிற்பாதியில் படுமோசமாக ஆடியது. அதேபோலவே, இந்த போட்டியிலும் முதல் பாதியில் அருமையாக பேட்டிங் ஆடி, 2ஆவது பாதியில் சொதப்பியது.

இதையடுத்து இலக்கை துரத்திய சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ராபீன் உத்தப்பா, மோயீன் அலி, அம்பத்தி ராயூடு ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து மிகப்பெரும் ஏமாற்றத்தை வழங்கினர்.

பின்னர் ஜோடி சேர்ந்த ஷிவம் துபே - எம் எஸ் தோனி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே அரைசதம் கடந்து 57 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து 23 ரன்களைச் சேர்த்த எம் எஸ் தோனியும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர்.

இதன்மூலம் 18 ஓவர்களில் சிஎஸ்கே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை