ஐபிஎல் 2022: ராஜபக்ஷா, ஸ்மித் அதிரடியில் பஞ்சாப் த்ரில் வெற்றி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்து ஆர்சிபியை பேட்டிங் செய்ய அழைத்தது.
முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்துள்ளது. அந்த அணியிந் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 57 பந்துகளில் 88 ரன்கள்(7சிக்ஸர், 3பவுண்டரி) சேர்த்து ஆட்டமிழந்தார். இவரின் காட்டடி ஆட்டம் ஸ்கோர் உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.
ஐபிஎல் வரலாற்றில் கேப்டனாக பதவிஏற்று முதல் ஆட்டத்தில் அதிகபட்சமாக ஸ்கோர் செய்த கேப்டன்களில் 4ஆவது கேப்டன் என்ற பெருமையை டூ பிளெசிஸ் பெற்றுவிட்டார். இதற்கு முன் சாம்ஸன்(119), மயங்க்அகர்வால்(99), ஸ்ரேயாஸ் அய்யர்(93) ஆகியோர் உள்ளனர்.
ஆர்சிபி அணி 9ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 11 ஓவர்களில் 148 ரன்கள் சேர்த்துள்ளது.
இதற்கு துணையாக ஆடிய முன்னாள் கேப்டன் விராட் கோலி 29 பந்துகளில் 41 ரன்களுடனும்(2சிக்ஸர், ஒருபவுண்டரி), தினேஷ் கார்த்திக் 14 பந்துகளில் 32 ரன்களுடனும் (3சிக்ஸர், 3 பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்
இதையடுத்து இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - ஷிகர் தவான் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர்.
இதில் இருவரும் அரைசதம் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயங்க் அகர்வால் 32 ரன்களிலும், ஷிகர் தவான் 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய பனுகா ராஜபக்ஷா அதிரடியாக விளையாடி 22 பந்துகளில் 43 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அறிமுக போட்டியில் களமிறங்கிய ராஜ் பாவா சிராஜின் முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.
அதன்பின் மறுமுனையில் 19 ரன்களுடன் விளையாடி வந்த லியாம் லிவிங்ஸ்டோனும் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயற்சித்து அனுஜ் ராவத்திடம் கேட்ச் கொடுத்தார். இதனால் ஆட்டத்தில் யார் வெற்றிபெறுவார் என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அதன்பின் ஜோடி சேர்ந்த ஷாருக் கான் - ஓடியன் ஸ்மித் இணை மைதானத்தில் பவுண்டரி மழை பொழிந்து போட்டியை பஞ்சாப் பக்கம் திருப்பினர்.
இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஓடியன் ஸ்மித் 25 ரன்களுடனும், ஷாருக் கான் 24 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.