ஐபிஎல் 2022 குவாலிஃபையர் 1: பட்லரின் இறுதிநேர அதிரடி; குஜராத் டைட்டன்ஸுக்கு 189 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 3 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அதன்பின் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் முதல் பந்தையே சிக்சருக்கு விளாசி தனது அதிரடியைத் தொடங்கினார். அவருடன் இணைந்து விளையாடிய ஜோஸ் பட்லர் நிதானமாக விளையாட, சாம்சன் பவுண்டரிகளில் பதிலளித்தார்.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் கடப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சாம்சன் 47 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 28 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதுவரை 100 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடிவந்த ஜோஸ் பட்லர், யாஷ் தயாள் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 4 பவுண்டரிகளை விளாசி தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதைத்தொடர்ந்து அல்சாரி ஜோசப் வீசிய 18ஆவது ஓவரிலும் 3 பவுண்டரிகளை விளாசினார்.
தொடர்ந்து ஜோஸ் பட்லர் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 89 ரன்களைச் சேர்த்தார்.