ஐபிஎல் 2022, குவாலிஃபையர் 1: மில்லர், ஹர்திக் அதிரடியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Tue, May 24 2022 23:37 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்றூ கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் முதல் தகுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் ஆடிவருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் அதன்பின்னர் இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் அடித்தார். தேவ்தத் படிக்கல் 28 ரன்கள் அடித்தார். ஒருமுனையில் நிலைத்து நின்று அடித்து ஆடிய ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார்.

இந்த சீசனின் தொடக்கத்தில் 3 சதங்கள் அடித்து, பின்னர் கடந்த சில போட்டிகளில் பெரிய ஸ்கோர் செய்ய முடியாமல் திணறிய பட்லர், இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி கடைசி பந்துவரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய பட்லர்56 பந்தில் 89 ரன்களை குவித்தார். 20 ஓவரில் 188 ரன்களை குவித்து 189 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் டைட்டன்ஸுக்கு நிர்ணயித்தது.

அதன்படி கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு முதல் ஓவரிலேயே விருத்திமான் சஹா ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் - மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் 35 ரன்கள் எடுத்திருந்த ஷுப்மன் கில் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து 35 ரன்களில் மேத்யூ வேட்டும் விக்கெட்டை இழந்தார்.

பின்னர் பொறுப்பை உணர்ந்து விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அவருடன் இணைந்து விளையாடிய டேவிட் மில்லரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த குஜராத் அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசமானது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் ஐபிஎல் தொடரில் தனது 12ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்தார். ஆனாலும் குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ராஜஸ்தான் அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா கடைசி ஓவரை வீசினார்.

அந்த ஓவரின் முதல் பந்தையே டேவிட் மில்லர் சிக்சருக்கு விளாசி அசத்தினார். அதற்கு அடுத்த பந்தையும் சிக்சருக்கு விளாச குஜராத் அணியின் வெற்றியும் உறுதியானது. அதற்கு அடுத்த பந்தையும் டேவிட் மில்லர் சிக்சருக்கு பறக்கவிட்டு அணியை வெற்றுபெற செய்தார்.

இதன்மூலம் 19.3 ஓவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணி இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியதுடன், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமால் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த டேவிட் மில்லர் 68 ரன்களையும், ஹர்திக் பாண்டியா 40 ரன்களையும் சேர்த்திருந்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை