ஐபிஎல் 2022: மும்பையை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ்!
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மும்பை இந்தியன்ஸும் ராஜஸ்தான் ராயல்ஸும் விளையாடின. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு ரன்னில் பும்ராவின் பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆம் வரிசையில் இறங்கிய மற்றொரு இளம் வீரரான தேவ்தத் படிக்கல் 7 ரன்னில் டைமல் மில்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய ஜோஸ் பட்லருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். அதிரடியாக ஆடிய பட்லர் அரைசதம் அடிக்க, சாம்சன் 21 பந்தில் 30 ரன் அடித்து ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் பட்லருடன் ஜோடி சேர்ந்த ஹெட்மயர் காட்டடி அடித்தார். 14 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 35 ரன்கள் அடித்து ஹெட்மயர் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பட்லர் சதமடித்தார். சதமடித்த பட்லர் 68 பந்தில் 100 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
பட்லர், சாம்சன், ஹெட்மயர் ஆகிய மூவரும் அதிரடியாக ஆடியபோதிலும், பட்லர் சதத்தை நெருங்கிய போது சில பந்துகளை வீணடித்து மெதுவாக ஆடியதாலும், மற்ற வீரர்கள் யாரும் சோபிக்காததாலும், 20 ஓவரில் 193 ரன்கள் மட்டுமே அடித்தது ராஜஸ்தான் அணி.
அந்த அணி ஆடிய வேகத்திற்கு இன்னும் பெரிய ஸ்கோரை அடித்திருக்கக்கூடும். பும்ரா கட்டுக்கோப்பாக பந்துவீசியதுடன் முக்கியமான விக்கெட்டுகளையும் வீழ்த்தியதால் 20 ஓவரில் ராஜஸ்தானை 193 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது மும்பை அணி.
இதையடுத்து 194 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 10 ரன்னிலும், அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷான் - திலக் வர்மா இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை யும் மளமளவென உயர்த்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷான், திலக் வர்மா இருவரும் அரைசதம் அடித்து அணிக்கு நம்பிக்கையளித்தனர். அதன்பின் 54 ரன்களில் இஷான் கிஷான் ஆட்டமிழக்க, 61 ரன்களில் திலக் வர்மா விக்கெட்டை இழந்தார்.
இதையடுத்து களமிறங்கிய டிம் டேவிட், டேனியல் சாம்ஸ் ஆகியோர் யுஸ்வேந்திர சஹாலின் அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
ஆனால் ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்கை கட்டுப்படுத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தில் த்ரில் வெற்றியைப் பெற்றது.