ஐபிஎல் 2022: ஹைதராபாத்தை வீழ்த்தி ராஜஸ்தான் அபார வெற்றி!

Updated: Tue, Mar 29 2022 23:13 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 5ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கத்திலேயே தடுமாறியது.

அதிலும் புவனேஷ்வர் குமார் விசிய முதல் ஓவரிலேயே ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழந்தார். ஆனால் அது நோ பாலாக அமைய பட்லர் தப்பித்தார்.

அதன்பின் அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த இருவரும் பவர்பிளேயில் 58 ரன்களைச் சேர்த்தது. அதன்பின் 20 ரன்களில் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். பின் பட்லருடன் ஜோடி சேர்ந்த கேப்டன் சஞ்சு சாம்சனும் அதிரடி ஆட்டத்தைக் கையிலெடுத்தார்.

அதன்பின் பட்லர் 35 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்துவந்த தேவ்தத் படிக்கல் அதிரடியாக ஆடத்தொடங்கினார். அவருடன் இணைந்து சஞ்சு சாம்சனும் எதிரணி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். பின் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் படிக்கல் விக்கெட்டை இழக்க, மறுமுனையிலிருந்த சாம்சன் அரைசதம் கடந்தார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களைக் குவித்தது. ஹைதராபாத் அணி தரப்பில் நடராஜன், உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக கேப்டன் கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி ஆகியோர் பிரஷித் கிருஷ்ணாவின் அடுத்தடுத்து ஓவர்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா, அப்துல் சமாத், நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 35 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. 

பின்னர் ஜோடி சேர்ந்த ஐடன் மார்க்ரம் -ரோமாரியா செஃபெர்ட் இணை ஓரளவு தாக்குபிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் 24 ரன்களைச் சேர்த்திருந்த செஃபெர்ட், சஹால் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார். 

அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர், நாதன் குல்டர் நைல் வீசிய 17ஆவது ஓவரில் அடுத்தடுத்து 5 பவுண்டரிகளை விளாசி ஆறுதலளித்தார். பின் 13 ரன்களில் 40 ரன்களைச் சேர்த்த வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஐடன் மார்க்ரம் அரைசதம் விளாசினார். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே சேர்த்தது.

இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் யுஸ்வேந்திர் சஹால் 3 விக்கெட்டுகளையும், பிரஷித் கிருஷ்ணா, ட்ரெண்ட் போல்ட் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை