தென் ஆப்பிரிக்கா ஏ அணி 221 ரன்களில் ஆல் அவுட்; இந்தியா ஏ அணி தடுமாற்றம்!

Updated: Fri, Nov 07 2025 22:34 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துருவ் ஜூரெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 132 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவற, இந்திய ஏ அணி 255 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டியான் வான் வூரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்காவும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். அதன்படி லெசெகோ செனோக்வானே, சுபைர் ஹம்சா, டெம்பா பவுமா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ஜோர்டன் ஹார்மனும் 26 ரன்களுடன் நடையைக் கட்டினார்.

அதன்பின் களமிறாங்கிய கேப்டன் அக்கர்மேன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த மறுமுனையில் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறினர். இருப்பினும் அபாரமாக விளையாடி வந்த அக்கர்மேன் சதமடித்து மிரட்டியதுடன் 17 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என 134 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இருப்பினும் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களை மட்டுமே  சேர்த்து ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்னா 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணி 34 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் அபிமன்யூ ஈஸ்வரன் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சாய் சுதர்ஷன் 23 ரன்னிலும், தேவ்தத் படிக்கல் 24 ரன்னிலும் என விக்கெட்டை இழந்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் காரணமாக இந்திய ஏ அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்களைச் சேர்த்தது. இதில் கேஎல் ராகுல் 26 ரன்னிலும், குல்தீப் யாதவ் ரன்கள் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் செலெ 2 விக்கெட்டுகளையும், டியான் வன் வூரன் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 112 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை