ஐபிஎல் 2022: வழக்கத்திற்கு மாறாக விளையாடிய பட்லர்; மும்பைக்கு 159 டார்கெட்!
ஐபிஎல் தொடரின் இன்று நடைபெற்றுவரும் 44ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜோஸ் பட்லர் - தேவ்தத் படிக்கல் இணை களமிறங்கியது. இதில் தேவ்தத் படிக்கல் 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட முயற்சித்து 16 ரன்களோடு வெளியேறினார்.
அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்த பொறுப்பை உணர்ந்த ஜோஸ் பட்லர் இன்றைய போட்டியில் வழக்கத்திற்கு மாறாக டிஃபென்ஸ் ஆட்டத்தை கையிலெடுத்தார்.
இதனால் 48 பந்துகளில் தான் தனது அரைசதத்தைப் பதிவு செய்தார். ஆனாலும் ஷோகீன் வீசிய 16ஆவது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்சர்களை விளாசி மிரளவைத்த அவர், அதே ஓவரின் கடைசி பந்தில் விக்கெட்டை இழந்தார்.
இப்போட்டியில் மொத்தம் 52 பந்துகளை சந்தித்த அவர், 4 சிக்சர், 5 பவுண்டரிகள் என 67 ரன்களைச் சேர்த்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் 17, ரியான் பராக் 3 என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
அதன்பின் களமிறங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின் யாரும் எதிர்பாராத வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். பின் 21 ரன்கள் எடுத்திருந்த அவர், கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது.