டி20 உலகக்கோப்பையில் நடராஜனை நாங்கள் மிஸ் செய்தோம் - ரவி சாஸ்திரி!
கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை போட்டியில், இந்திய அணி கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு இருந்தது. ஆனால், லீக் சுற்றிலேயே வெளியேறி, கடும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி இருந்தது.
இதனையடுத்து, இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் வைத்து நடைபெறவுள்ள டி 20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
இதனிடையே, இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டியில் ஒரு தமிழக வீரரை தவற விட்டது பற்றி, தற்போது கருத்து தெரிவித்துள்ளார். 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி, டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்திருந்தது.
இந்த சுற்றுப்பயணத்தில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் நடராஜன், வலைப்பந்து வீச்சாளர்க இருந்து, பின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக, மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி தன்னுடைய திறனை நிரூபித்திருந்தார்.
நடராஜன் குறித்து பேசிய ரவி சாஸ்திரி, "உலக கோப்பைத் தொடரில் நாங்கள் நடராஜனை மிஸ் செய்தோம். இங்கிலாந்து தொடரின் போது காயம் அடைந்த காரணத்தால், உலக கோப்பை தொடரில் நடராஜனால் இடம்பிடிக்க முடியவில்லை. அவர் அவ்வளவு ஸ்பெஷலிஸ்ட் டெத் பவுலர் ஆவார். யார்க்கர் பந்துகளை மிகவும் துல்லியமாக வீசுகிறார். நாம் நினைப்பதை விட வேகமாக, பேட்டில் பட்டு விடும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில், நடராஜனை நாங்கள் களமிறக்கிய போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றோம். அவரின் டி 20 அறிமுக போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. அவரின் முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. வலைப்பந்து வீச்சாளராக வந்து, இரண்டு வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் நடராஜன் அறிமுகம் ஆகினார்" என ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்த நடராஜன், சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு, ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வருகிறார். இவரை ஐபிஎல் ஏலத்தில், ஹைதராபாத் அணி, நான்கு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது.
இதுவரை அந்த அணி ஆடிய இரண்டு போட்டிகளில், மொத்தம் 4 விக்கெட்டுகளை நடராஜன் எடுத்துள்ளார். அதிலும், அவர் நேற்று லக்னோ அணிக்கு எதிராக, யார்க்கர் பந்து வீசி, க்ருனால் பாண்டியாவை போல்ட் ஆக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.