ஐபிஎல் 2022: ராஜஸ்தான் பேட்டர்களை ஸ்தம்பிக்கவைத்த ஆர்சிபி பவுலர்கள்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 39ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தேவ்தத் படிக்கல் 7 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் வெளியேற, அடுத்து களமிறங்கி அடித்து விளையாடிய அஸ்வினும் 17 ரன்களில் சிராஜிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் நடப்பு சீசனில் 3 சதங்களை விளாசி அசுர ஃபார்மில் இருக்கும் ஜோஸ் பட்லர் 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜோஷ் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் விக்கெட் இழப்பையும் பொருட்படுத்தால் சிக்சர்களை விளாசி ஆர்சிபி பந்துவீச்சாளர்களை திணறிடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாம்சன் 27 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து டேரில் மிட்செலும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் ரன் சேர்க்க தடுமாற, ரியான் பராக் மட்டும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தைப் பதிவு செய்தார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் பராக் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்.