ஐபிஎல் 2022: டெல்லியைப் பந்தாடியது ஆர்சிபி!
ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடள்ஸும் ஆர்சிபியும் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் அனுஜ் ராவத் (0) மற்றும் டுப்ளெசிஸ் (8) ஆகிய இருவருமே ஏமாற்றமளித்தனர். கோலி 12 ரன்னில் ரன் அவுட்டானார். பிரபுதேசாய் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 55 ரன்னில் ஆட்டமிழக்க, 11.2 ஓவரில் 92 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது ஆர்சிபி அணி.
அதன்பின்னர் தினேஷ் கார்த்திக்கும் ஷபாஸ் அகமதுவும் பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக ஆடினர். களத்தில் நிலைத்தபின்னர் பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய தினேஷ் கார்த்திக் அரைசதம் அடித்தார். 17 ஓவரில் ஆர்சிபி அணி 132 ரன்கள் அடித்திருந்த நிலையில், முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 18வது ஓவரில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 28 ரன்களை அடித்தார் தினேஷ் கார்த்திக்.
கடைசி 2 ஓவர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஷபாஸ் அகமதுவும் பவுண்டரியும் சிக்ஸருமாக அடிக்க, 20 ஓவரில் 189 ரன்களை குவித்த ஆர்சிபி அணி, 190 ரன்கள் என்ற சவாலான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
தினேஷ் கார்த்திக் 34 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 66 ரன்களை குவித்து கடைசிவரை களத்தில் இருந்தார் .
அதன்பின் இலக்கை துரத்திய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் பிரித்வி ஷா 16 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த மிட்செல் மார்ஷ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தார்.
ஆனால் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த டேவிட் வார்னர் 29 பந்துகளில் அரைசதம் கடந்தார். இது அவர் அடிக்கும் 52ஆவது ஐபிஎல் அரைசதமாகும்.
அதன்பின் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய வார்னர் 66 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த மிட்செல் மார்ஷ் 14 ரன்களுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய ரொவ்மன் பாவல், லலித் யாதவ் ஆகியோர் ஜோஷ் ஹசில்வுட்டின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர்.
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த ரிஷப் பந்த் இறுதிவரை களத்தில் இருந்து ஆட்டத்தை முடித்துவைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தங்களது 4ஆவது வெற்றியைப் பெற்றது.