ஐபிஎல் 2022: டூ பிளெசிஸ், படித்தர், கார்த்திக் அதிரடி; சன்ரைசர்ஸுக்கு 193 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 54ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடியது.
அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி, சுஜித் வீசிய முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். மேலும் நடப்பு சீசனில் விராட் கோலியின் மூன்றாவது கோல்டன் டக்காகவும் இது அமைந்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாஃப் டூ பிளெசிஸ் - ராஜத் படித்தர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.
இதில் ஃபாஃப் அரைசதம் கடக்க, மறுமுனையில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ராஜத் படித்தர் 48 ரன்காள் எடுத்த நிலையில் உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
மறுமுனையில் தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய டூ பிளெசிஸ் பவுண்டரிகளை பறக்கவிட, அவருடன் இணைந்த மேக்ஸ்வெல்லும் பந்துவீச்சாளர்களுக்கு தண்ணிக்காட்டினார்.
அதன்பின் 33 ரன்கள் எடுத்திருந்த கிளென் மேக்ஸ்வெல், கார்த்திக் தியாகி பந்துவீச்சை சிக்சர் அடிக்க முயற்சித்து ஐடன் மார்க்ரமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து 3 சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 73 ரன்களைச் சேர்த்தார்.