ஐபிஎல் 2022: அரைசதம் கடந்து அணியை காப்பாற்றிய சுதர்ஷன்; பஞ்சாப்பிற்கு 144 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 48ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி வழக்கத்திற்கு மாறாக முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய குஜராத் அணியில் சுப்மன் கில் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷி தவானின் ராக்கெட் வேகத் த்ரோவால் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
அதன்பின் அதிரடியாக விளையாடி வந்த விருத்திமான் சஹா 21 ரன்களிலும், கேப்டன் ஹர்திக் பாண்டியான், டேவிட் மில்லர், ராகுல் திவேத்தியா, ரஷித் கான் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
ஆனாலும் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தினார்.
இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்ஷன் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் அணி தரப்பில் காகிசோ ரபாடா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.