ஐபிஎல் 2022: இளம் வீரரை புகழ்ந்த டூ பிளெசிஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டூபிளசிஸ் தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது. அதன்பின் 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை துரத்தி களமிறங்கிய பெங்களூர் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.
இந்தநிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான இந்த வெற்றி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூ பிளெசிஸ், பெங்களூர் அணியின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமான சபாஷ் அகமதை வெகுவாக பாராட்டியும் பேசியுள்ளார்.
ஷபாஷ் அஹ்மத் குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “ஷபாஷ் அஹ்மதின் உருவத்தை பார்த்து அவரை அனைவரும் தவறான எடை போடுகின்றனர். உடல் ஒல்லியாக இருக்கும் அவரால் பெரிய ஷாட்கள் அடிக்க முடியாது என்றே பலரும் கருதுகின்றனர், ஆனால் சபாஷ் அகமத் மிக சிறந்த வீரர்.
அவரால் எப்படிப்பட்ட ஷாட்களையும் அடிக்க முடியும். ஆடுகளமும், பந்தும் ஈரத்தன்மையுடன் இருந்ததால் இந்த போட்டியில் அவருக்கு பந்துவீசும் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, ஆனால் இந்த தொடரில் அவரது பங்களிப்பு பெங்களூர் அணியில் முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.