ஐபிஎல் 2022: ஆர்சிபியை பந்தாடியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

Updated: Sat, Apr 23 2022 22:15 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான ஃபாஃப் டுப்ளெசிஸ், அனுஜ் ராவத் மற்றும் விராட் கோலி ஆகிய மூவரையுமே இன்னிங்ஸின் 2ஆவது ஓவரிலேயே வெளியேற்றினார் மார்கோ யான்சென். தனது முதல் ஓவரிலேயே ஃபாஃப், கோலி ஆகிய இரண்டு பெரிய பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி சன்ரைசர்ஸை டிரைவர் சீட்டில் அமரவைத்தார் யான்சன்.

அதன்பின்னர் எழவே முடியாமல் விழுந்தது ஆர்சிபி அணி. மேக்ஸ்வெல்லை 12 ரன்னில் நடராஜன் வீழ்த்தினார். பிரபுதேசாயை 15 ரன்னில் வீழ்த்திய ஜெகதீஷா சுஜித், தினேஷ் கார்த்திக்கை டக் அவுட்டாக்கி அனுப்பினார். மேக்ஸ்வெல்லை வீழ்த்திய நடராஜன், அதன்பின்னர் ஹர்ஷல் படேல்(4) மற்றும் ஹசரங்கா (8) ஆகிய இருவரையும் வீழ்த்த, 16.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆர்சிபி அணி.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் யான்சென் மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் அதிகபட்சமாக தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து 69 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 47 ரன்களை விளாசினார். 

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை