ஐபிஎல் 2022: கடும் பயோ பபுள் விதிகளை அமல்படுத்திய பிசிசிஐ!

Updated: Wed, Mar 16 2022 20:52 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் இம்மாதம் 26ஆம் தேதி முதல் மஹாராஷ்டிராவில் கோலாகலமாக தொடங்குகிறது. இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலையொட்டி ஐபிஎல் 2022 தொடருக்கான பயோ பபுள் விதிமுறைகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகளை மீறும் வீரர்கள் தொடரில் விளையாட தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர குடும்ப உறுப்பினர்களுக்கும் கட்டுபாட்டுகளை அறிவித்துள்ள பிசிசிஐ, மீறும் வீரருக்கு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளது.  

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. பின்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மற்ற போட்டிகள் நடத்தப்பட்டன. அதேமாதிரியான சிக்கல் மீண்டும் எழாத வகையில், இந்த ஆண்டு ஐபிஎல் பயோ பபிள் விதிகளை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் அணி உரிமையாளர்களும் பின்பற்ற வேண்டும்.  

ஐபிஎல் பயோ பபிள் விதிமுறைகள்

  • முதல் முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், வீரர்கள் 7 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவார்கள்
  • விளையாடாத போட்டிகளுக்கு வீரர்கள் / போட்டி அதிகாரிகள் ஊதியம் பெற மாட்டார்கள்.
  • இரண்டாவது முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு போட்டி விளையாட தடை விதிக்கப்படும்.
  • மூன்றாவது முறையாக குற்றம் நிரூபிக்கப்பட்டால், வீரர் / அணி நிர்வாக ஊழியர்கள் ஐபிஎல் பயோ-பப்பில் இருந்து நீக்கப்படுவர்
  • நீக்கப்படும் வீரருக்கு மாற்று வீரரை சேர்த்துக்கொள்ள முடியாது.

இது தவிர கரோனா பரிசோதனையை தவறவிடும் வீரர்களுக்கு முதன்முறையாக எச்சரிக்கை விடுக்கப்படும். அடுத்தமுறை தவறு நேர்ந்தால் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதுடன், மைதானத்தில் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். 

குடும்ப உறுப்பினர்களுக்கான கட்டுப்பாடு

முதல் முறையாக குற்றம் நடந்தால், குடும்ப உறுப்பினர் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார். அந்த வீரரும் தனிமைப்படுத்தப்படுவார். அந்த காலத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு ஊதியம் கிடையாது. இரண்டாவது முறையாக நடந்தால் குடும்ப உறுப்பினர் ஐபிஎல் பயோ பபிள் குழுவில் இருந்து முற்றிலுமாக நீக்கப்படுவார்.

உரிமையாளர்களுக்கு கட்டுப்பாடு

1. வீரருடன் அந்தந்த உரிமையாளரும் தண்டிக்கப்படுவார்கள். முதன்முறையாக உரிமையாளரே குற்றம் செய்தால், ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும். இரண்டாவது முறையாக தவறு நடந்தால் ஒரு புள்ளிகள் குறைக்கப்படும்.  3ஆவது முறையாக தவறு நடத்தால் 2 புள்ளிகள் குறைக்கப்படும்.

2. குறைந்தபட்சம் 12 வீரர்களை ஒரு அணி களமிறக்க தவறும் பட்சத்தில் போட்டி மீண்டும் நடத்த திட்டமிட முயற்சி எடுக்கப்படும். அதற்கான வாய்ப்புகள் இல்லாதபோது அந்த அணிக்கான போட்டி ரத்து செய்யப்படும். பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிக்கு தெரியாமல் அணி வீரர்கள் வெளியேறினால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படும். 

ஐபிஎல் தொடரின் சூழலைக் கருத்தில் கொண்டு இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை