ஐபிஎல் 2022: மும்பை அணியில் சூர்யகுமார் விளையாடுவது சந்தேகம்!
ஐபிஎல் 15ஆவது சீசன் வரும் 26ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுவரும் நிலையில், சாம்பியன் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகிறது.
ஐபிஎல் மெகா ஏலத்தில் வழக்கம்போலவே ஏலத்தில் நிதானமாக இருந்து, தங்களுக்கு தேவையான தரமான வீரர்களை தட்டி தூக்கி வலுவான அணியை கட்டமைத்தது. ரோஹித், பும்ரா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்டு ஆகிய 4 வீரர்களையும் தக்கவைத்திருந்த மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்தில் எத்தனை கோடி கொடுத்தேனும், இஷான் கிஷனை எடுக்கும் உறுதியில் இருந்த நிலையில், அவரை ரூ.15.25 கோடி கொடுத்து எடுத்தது.
அணியில் ஏற்கனவே, சமகாலத்தின் சிறந்த ஃபாஸ்ட் பவுலரான பும்ரா இருக்கும் நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சரையும் ஏலத்தில் எடுத்தது மும்பை அணி. பேபி ஏபி என்றழைக்கப்படும் தென்னாப்பிரிக்காவின் அண்டர் 19 ஸ்டார் பிளேயர் டிவால்ட் பிரெவிஸ் மற்றும் இந்திய அண்டர் 19 வீரர் திலக் வர்மா ஆகியோரையும் அணியில் எடுத்தது.
ஸ்பின்னர்களாக முருகன் அஷ்வின் மற்றும் ஏற்கனவே மும்பை அணியில் ஆடிய மயன்க் மார்கண்டே ஆகியோரையும், வெளிநாட்டு வீரர்கள் டைமல் மில்ஸ், ரிலே மெரிடித், ஃபேபியன் ஆலன் ஆகியோரையும் அணியில் எடுத்தது. உள்நாட்டு கிரிக்கெட் ஜாம்பவானான இடது கை ஃபாஸ்ட் பவுலர் ஜெய்தேவ் உனாத்கத்தையும் எடுத்தது.
வழக்கம்போலவே வலுவான அணியை கட்டமைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, 15வது சீசனுக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. இந்நிலையில், இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் காயமடைந்த சூர்யகுமார் யாதவ், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு மையத்தில் உள்ளார். அதனால் தான் அவர் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும் ஆடவில்லை. ஐபிஎல்லில் மும்பை அணி வரும் 27ம் தேதி நடக்கும் முதல் போட்டியில் டெல்லி கேபிடள்ஸை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் ஆடமாட்டார் என்று தெரிகிறது. இது மும்பை அணிக்கு பின்னடைவாக அமையும். அதற்கடுத்த போட்டிகளில் ஆடுவார் என்று தெரிகிறது.