ஐபிஎல் 2022: கடும் வீழ்ச்சியை சந்தித்த டிஆர்பி ரேட்டிங்!
கடந்த மார் 26ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் போட்டிகள் கடந்த ஒன்றரை மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ மற்றும் ராஜஸ்தான் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
நடப்பு தொடரே இன்னும் முடிவடையாத சூழலில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரபரப்பு உரிமையை விற்பதற்கான பணிகளில் பிசிசிஐ தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதற்கான ஏலம் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகப்படியான அடிப்படை தொகையை பிசிசிஐ நிர்ணயம் செய்யவுள்ளது.
இந்நிலையில் அதற்கு பெரும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. அதாவது நடப்பு ஐபிஎல் தொடரை ரசிகர்கள் யாரும் பெரியளவில் பார்க்கவில்லை எனத்தெரியவந்துள்ளது. கடந்த 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரையிலான "பார்க்" ரேட்டிங்கில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது. முதல் மூன்று இடங்களில் சன் டிவி, ஸ்டார் மா, ஸ்டார் ப்ளஸ் ஆகியவை உள்ளன.
வழக்கமான பார்வையாளர்களை விட, தற்போது 30% வரை குறைந்துள்ளது தெரியவருகிறது. நடப்பு தொடரின் முதல் 25 போட்டிகளை கணக்கு வைத்து பார்க்கையில் 22 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட பார்வையாளர்களின் எண்ணிக்கை 58 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது விளம்பர தாரர்களுக்கு பெரும் நஷ்டமாகும்.
விளம்பரதாரர்கள் அனைவரும் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாக தெரிகிறது. எனவே அந்த சேனல் நேரடியாக பிசிசிஐயிடம் வரவுள்ளது. இதனால் அடுத்த 5 ஆண்டுக்கான ஒளிபரபரப்பு உரிமைக்கான அடிப்படை தொகையை பல மடங்கு குறைக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.
இந்த சரிவுக்கு முக்கிய காரணமாக சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகள் தான் பார்க்கப்படுகிறது. அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட இந்த இரு அணிகளுமே தொடக்கத்தில் இருந்தே சொதப்பி வருகிறது. தற்போது தொடரில் இருந்தும் வெளியேறிவிட்டது. இதனால் ஐபிஎல் மீது ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே கசப்பான உண்மை.