ஐபிஎல் 2022: ஷா, வார்னர் அதிரடி; கேகேஆருக்கு 216 டார்கெட்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கேகேஆர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் - பிரித்வி ஷா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தது.
தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். அதன்பின் 51 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரிஷப் பந்த் அதிரடியை தொடர்ந்தார்.
இதற்கிடையில் டேவிட் வார்னர் நடப்பு சீசனில் தனது முதல் அரைசதத்தைக் கடந்தார். அவருடன் இணைந்து அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த லலித் யாதவ், ரோவ்மன் பாவல் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
அதற்கடுத்து 61 ரன்களைச் சேர்த்த டேவிட் வார்னரும் தனது விக்கெட்டை இழந்தார். ஆனால் அதன்பின் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாக்கூர் - அக்ஸர் படேல் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை மளமளவெஅ உயர்த்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்களைக் குவித்தது. கேகேஆர் அணி தரப்பில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.