விராட் கோலி ஓபனராக விளையாட கூடாது - வாசிம் ஜாஃபர்!
இந்தியாவில் எதிர்வரும் 26ஆம் தேதி பதினைந்தாவது ஐபிஎல் தொடரானது கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் பங்கேற்க உள்ள அனைத்து அணிகளும் தற்போது தங்களது அணியின் வீரர்களை ஒன்றிணைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக கோப்பையை வெல்லும் என்று ரசிகர்களால் கூறப்பட்டாலும் இதுவரை கோப்பையை கைப்பற்ற அணியாக இருந்து வரும் பெங்களூரு அணியும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு வரை அந்த அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி தற்போது கேப்டன் பதவியில் இருந்து வெளியேறி உள்ளதால் அந்த இடத்தில் புதிதாக வாங்கப்பட்ட டூ பிளெஸ்ஸிஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்பட உள்ளார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெங்களூரு அணி தற்போது பல புதிய வீரர்களை அணியில் இணைத்துள்ளதால் இந்த வருடம் நிச்சயம் தங்களது பலமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை கைப்பற்ற முயற்சிக்கும் என்று கூறப்படுகிறது. அதோடு கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி வெளியேறியுள்ளதால் இந்த ஆண்டு மிகவும் அபாயகரமான வீரராக அவர் திகழ்வார் என்று மேக்ஸ்வெல் கூறியிருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி இந்த வருடம் பெங்களூர் அணிக்காக எந்த இடத்தில் இறங்க வேண்டும் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஐபிஎல் தொடரில் எப்போதுமே விராட் கோலி ஓபனராக கடந்த சில ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை விராட் கோலி ஓபனராக விளையாடக்கூடாது. அவரது இடமான மூன்றாவது இடத்தில் இறங்குவதே பெங்களூர் அணிக்கு நல்லது.
ஏனெனில் விராட் கோலி எந்த இடத்தில் களமிறங்கினாலும் சிறப்பாக விளையாட முடியும். ஆனால் நம்பர் 3 இல் அவர் இறங்கும்போது அணியை நல்ல ரன் குவிப்பிறகு கட்டமைத்து அவரால் பெரிய இலக்கினை நோக்கி கொண்டு செல்ல முடியும்.
எனவே அதுதான் பெங்களூரில் அணிக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் தற்போது விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகி உள்ளதால் எந்தவித அழுத்தமும் இன்றி சிறப்பாக விளையாட இந்த மூன்றாம் இடம்தான் அவருக்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.