ஐபிஎல் 2022: ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்குமா சிஎஸ்கே?

Updated: Sun, Apr 03 2022 14:04 IST
Image Source: Google

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. தொடக்க போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும், 2ஆவது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது.

இந்நிலையில் சிஎஸ்கே அணி 3ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸை இன்று எதிர்கொள்கிறது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

இதில் சிஎஸ்கே அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் 2 ஆட்டத்திலும் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்ததாலே தோல்வியை தழுவியது. லக்னோவுக்கு எதிராக 210 ரன் குவித்தும் வெற்றி பெற முடியாமல் போனது பரிதாபமே. இதற்கு பனித்துளிகள் காரணமாகும்.

இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுப்படி 2ஆவது பேட்டிங் செய்யும் அணியே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளது. 10 ஆட்டத்தில் 7இல் 2ஆவது பேட்டிங் செய்த அணியே வெற்றியை ருசித்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த அணியே 3-ல் வெற்றி பெற்றுள்ளது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. டாசில் வெல்லும் அணி பந்து வீச்சை தேர்வு செய்கிறது.

பனித்துளியால் 2ஆவதாக பந்து வீசுவது சவாலாக இருக்கிறது. இதனால் முதலாவதாக பந்து வீச்சை செய்கிறது. சென்னை அணி 2 ஆட்டத்திலும் டாசில் தோற்று இருந்தது.

முதல் 2 ஆட்டத்தில் தோற்றுள்ளதால் சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா நெருக்கடியில் உள்ளார். தோல்வியில் இருந்து மீண்டு வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய நிலையில் சிஎஸ்கே உள்ளது. உத்தப்பா, மொயீன் அலி, ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டோனி ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

சென்னை அணியின் பந்து வீச்சு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிது. இதை சரி செய்வது அவசியமாகும். முன்னணி வேகப்பந்து வீரரான தீபக் சாஹர் காயம் காரணமாக விளையாடவில்லை. இது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை வீழ்த்தியது. 2ஆவது ஆட்டத்தில் கொல்கத்தாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

பஞ்சாப் அணி சிஎஸ்கே வீழ்த்தி 2ஆவது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிதர் தவான், பனுகா ராஜபக்சே, ஒடியன் சுமித், ரடோ, லிவ்விங்ஸ்டோன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

இரு அணிகளும் இன்று மோதுவது 26ஆவது போட்டியாகும். இதுவரை நடந்த 25 போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் 15-ல், பஞ்சாப்கிங்ஸ் 10-ல் வெற்றி பெற்றுள்ளன. இரு அணிகளும் வெற்றிக்காக போராடுகிறார்கள் என்பதால் ஆட்டம் விறு விறுப்பாக இருக்கும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை