ஐபிஎல் 2023: அகர்வால், விவ்ராந்த் அரைசதம்; மும்பைக்கு கடின இலக்கு!
16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவிவருகிறது.
அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெற்று வரும் தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான சூழலில், டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார்.
இதையடுத்து ஹைதராபாத அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் விவ்ராந்த் சர்மா இணை களமிறங்கினர். இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் மளமளவென ஸ்கோரை உயர்த்தியதுடன், 100 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் சேர்த்தனர். இதுதான் ஹைதராபாத அணியின் தொடக்க வீரர்கள் இந்த சீசனில் தொடக்க வீரர்கள் அடித்து அதிகபட்சம பார்ட்னர்ஷிப்பாகவும் அமைந்தது.
தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவருமே அரைசதம் கடக்க, இவர்களைப் பிரிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் தடுமாறினர். அதன்பின் 2 சிக்சர், 9 பவுண்டரி என 69 ரன்களைச் சேர்த்திருந்த விவ்ராந்த் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 4 சிக்சர், 8 பவுண்டரி என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனால் அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் ஒரு ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 18 ரன்களிலும், ஹாரி ப்ரூக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆகாஷ் மதுவால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆகாஷ் மதுவால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.