ஐபிஎல் 2023: குஜராத் தடவல் பேட்டிங்; லாக்னோவுக்கு எளிய இலக்கு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 30ஆவது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. லக்னோவிலுள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
அதன்படி அந்த அணியின் தொடக்க வீரர்களாக விருதிமான் சஹா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். நடப்பு ஐபிஎல் சீசனில் அபார ஃபார்மில் இருந்துவரும் ஷுப்மன் கில் இன்றைய போட்டியில் சந்தித்த இரண்டாவது பந்திலேயே தூக்கி அடிக்க முயற்சித்து ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த விருதிமான் சஹா - கேப்டன் ஹர்திக் பாண்டியா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். ஆனாலும் இவர்களது பேட்டிங் பெரிதளவில் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஏனெனில் இருவரும் அடித்த ரன்களுக்கு நிகராக பந்துகளையும் வீணடித்தனர்.
பின் அரைசதம் அடிப்பார் அன எதிர்பார்க்கப்பட்ட விருதிமான் சஹா 47 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அபினவ் மனோகர் 3 ரன்களிலும், பின்னர் வந்த விஜய் சங்கர் 10 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
அதன்பின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 44 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் அதிரடி காட்ட தொடங்கிய ஹர்திக் பாண்டியா, ரவி பிஷ்னோய் வீசிய 18ஆவது ஓவரில் அடுத்தடுத்து 2 சிக்சர்கள், ஒரு பவுண்டரி என அடித்து நொருக்கினார். அதன்பின் 66 ரன்களை எடுத்திருந்த ஹர்திக் பாண்டிய ஆட்டமிழந்தார்.
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்களை மட்டுமே சேர்த்தது. லக்னோ அணி தரப்பில் குர்னால் பாண்டியா, மார்கஸ் ஸ்டொய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர்.