சிஎஸ்கேவிலிருந்து ஜடேஜா விலகுவது உறுதி; மாற்று அணி எது?
2023ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏற்பாடுகள் தற்போது இருந்தே தொடங்கிவிட்டன. மினி ஏலம் மற்றும் வீரர்கள் ட்ரேடிங் குறித்த பரபரப்பு ரசிகர்களிடையே அதிகளவில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஐபிஎல் போட்டிக்காக ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்ற சூழலில் அடுத்தாண்டு வீரர்களை வாங்குவதற்கு மினி ஏலம் மட்டுமே நடைபெறவுள்ளது. இதில் இரு அணிகளுக்கு இடையே வீரர்களை மாற்றிக்கொள்வார்கள் மற்றும் குறைந்த அளவிலான வீரர்களை வாங்குவார்கள்.
அதாவது 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் நவம்பர் 15ஆம் தேதிக்குள்ளாக சமர்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அணிகள் தங்களது இறுதி முடிவை அறிவிக்க தொடங்கிவிட்டன.
இந்நிலையில் இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா விலகுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. கடந்த சீசனில் சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ஜடேஜா சில போட்டிகளிலேயே மீண்டும் பதவியில் இருந்து விலகினார். அதன்பின் ஒரு போட்டியில் கூட அவர் விளையாடவில்லை. இதனால் அணி நிர்வாகத்துடன் ஜடேஜாவுக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
அவரை சமாதானப்படுத்த சிஎஸ்கே நிர்வாகம் முயற்சித்த போதும், அவர் வேறு அணிக்கு செல்ல விரும்பியதாக தெரிகிறது. இதனையடுத்து ஜடேஜாவை ட்ரேடிங் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு அவரை மாற்றுவதற்கு பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு மாற்றாக ஷர்துல் தாக்கூரை மீண்டும் அணிக்குள் கொண்டு வரவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
ஷர்துல் தாக்கூரை டெல்லி கேப்பிடல்ஸ் அணி விடுவிக்கவுள்ளதாக முன்பே அறிவித்திருந்தது. எனவே இந்த இரு அணிகளுக்கும் இடையே ட்ரேடிங் நடக்கவுள்ளது. இதே போல பென் ஸ்டோக்ஸையும் வாங்குவதற்கு சென்னை அணி நிர்வாகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.