கோலி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டது - கெவின் பீட்டர்சன்!

Updated: Tue, May 23 2023 12:49 IST
IPL 2023: Kevin Pietersen Suggests Virat Kohli Move To Delhi Capitals After RCB Crash Out Of Tournam (Image Source: Google)

இந்த தசாப்தத்தின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் 'ரன் மிஷினாக' செயல்பட்டு தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறார். சர்வதேச அளவில் 75 சதங்களை விளாசி, சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் ரெக்கார்டை வேகமாக நெருங்கி வருகிறார். இப்படி சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி தொடர்ந்து மிரட்டலாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார்.

2008ஆம் ஆண்டு முதலே, ஆர்சிபி அணிக்காக மட்டும் விளையாடி, அந்த அணிக்கு கேப்டனாகவும் இருந்திருக்கிறார். இருப்பினும், இவரால் ஒருமுறைகூட கோப்பை வென்றுகொடுக்க முடியவில்லை. ஆகையால், 2021-ஆம் ஆண்டில் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

2008 முதல் ஒரே அணிக்காக விளையாடி வரும் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான இவர், 16ஆவது சீசனிலும் கோப்பை வெல்லும் முனைப்பில் ஆர்சிபி அணிக்காக தொடர்ந்து அதிரடி காட்டினார். இருப்பினும், மிடில் வரிசையில் படுமோசமான சொதப்பல் காரணமாக, ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதிபெறாமல் வெளியேறியது.

கோலி, 16ஆவது சீசனின் கடைசி 2 போட்டிகளிலும் சதம் அடித்து, ஐபிஎலில் அதிக சதங்கள் (7) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் ஆர்சிபிக்காக மொத்தம் 237 போட்டிகளில் விளையாடி 7 சதங்கள் உட்பட 7263 ரன்களை குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால், அந்த அணி ஒரு முறைகூட கோப்பை வெல்லாதது தான் சோகமான விஷயம்.

ஆர்சிபி 2008 முதலே கோப்பை வெல்லவில்லை என்றாலும், அந்த அணியை ரசிகர்கள் விட்டுக்கொடுப்பதே இல்லை. ஒவ்வொரு சீசனிலும் ப்ரெஷ்ஷாக 'ஈ சாலா கப் நம்தே' என கோஷம் போட்டுக்கொண்டே வந்துவிடுகிறார்கள். தோற்றால், அடுத்த சீசனில் பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக்கொண்டே சென்றுவிடுகிறார்க்கள். இப்படி ஆர்சிபி ரசிகர்களின் ஆதரவால் நெகிழ்ந்துபோன விராட் கோலி, நான் கடைசிவரை ஆர்சிபி அணிக்காகதான் விளையாடுவேன் என திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், கோலி டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாட வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அதில், “கோலியின் சொந்த ஊர் டெல்லி. அந்த அணியும் ஒருமுறைகூட கோப்பை வெல்லவில்லை. அவர் டெல்லிக்காக ஆட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோலி டெல்லிக்காக கோப்பை வென்றுகொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை