ஐபிஎல் மினி ஏலம்: குஜராத் அணியிலிருந்து இரு வீரர்களை தட்டித்தூக்கியது கேகேஆர்!

Updated: Sun, Nov 13 2022 14:54 IST
Image Source: Google

ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை நவம்பர் 15ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த சீசனில் அறிமுகமான குஜராத் டைடன்ஸ் அணி தனது முதல் சீசனிலேயே தொடர்ந்து அபாரமாக செயல்பட்டு கோப்பையை தட்டித்தூக்கியது. கேப்டன் ஹார்திக் பாண்டியா அணியை மிகச்சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.

இதனால், அந்த அணி மினி ஏலத்திற்கு முன் நடைபெறும் ட்ரேடிங்கில் ஆர்வம் காட்டாது எனக் கருதப்பட்டது. இந்நிலையில், குஜராத் அணி லாக்கி ஃபர்குசனையும், ஆஃப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் பேட்டர் குர்பாஸையும் கொல்கத்தா அணிக்கு ட்ரேடிங் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் அணியின் பலத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில்தான் இந்த ட்ரேடிங்கை குஜராத் நிர்வாகம் மேற்கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. ஆம், ஃபர்குஷனை விட்டுக்கொடுப்பது மூலம் குஜராத் அணிக்கு 10 கோடி மிச்சமாகும். இந்த தொகையை வைத்து ஃபர்குசனுக்கு மாற்றாக சாம் கரன் அல்லது பென் ஸ்டோக்ஸை வாங்க முடியும். இதனால்தான், குஜராத் இந்த முடிவினை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

குஜராத் அணியில் முகமது ஷமி, யாஷ் தயாள், அல்ஸாரி ஜோசப், ஹார்திக் பாண்டியா ஆகிய தரமான பாஸ்ட் பௌலர்கள் இருக்கிறார்கள். ரஷித் கான், சாய் கிஷோர் ஆகிய தரமான ஸ்பின்னர்களும் உள்ளனர். கொல்கத்தா அணி ஆரோன் ஃபிஞ்சை கழற்றிவிட உள்ளதாக கூறப்படும் நிலையில்தான் மாற்று ஓபனர் குர்பஸை ட்ரேடிங் மூலம் வாங்கியுள்ளனர். 

இதன்மூலம் ஃபிஞ்ச் வெளியேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ஃபர்குசன் 2017 முதல் 2021ஆம் ஆண்டுவரை கொல்கத்தா அணிக்காகத்தான் விளையாடி வந்தார். இவரை மெகா ஏலத்தில் கொல்கத்தா அணியால் தக்கவைக்க முடியவில்லை. இவர் வந்திருப்பதால் அந்த அணியின் பந்துவீச்சு துறை பலமடைந்துள்ளது. பாட் கம்மின்ஸ், டிம் சௌதீ, ஷிவம் மாவி, உமேஷ் யாதவ் ஆகிய சிறந்த வேகப்பந்து வீச்சு படை கொல்கத்தா அணிக்கு அமைந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை