GSL 2025: ராங்பூர் ரைடர்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது கயானா அமேசன் வாரியர்ஸ்!
குளோபல் சூப்பர் லீக் 2025: ராங்பூர் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் ஜான்சன் சார்லஸ், ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் காரணமாக கயானா அமேசன் வாரியஸ் அணி சாம்பியன் பாட்டத்தை வென்றது.
குளோபல் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசனானது கயானாவில் உள்ள புரோவிடன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மொத்தம் ஐந்து அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரின் இறுதிப்போட்டிக்கு கயானா அமேசன் வாரியர்ஸ் மற்றும் ராங்பூர் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற அமேசன் வாரியர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து களமிறங்கியது. இதையடுத்து அணியின் தொடக்க வீரர்களாக ஜான்சன் சார்லஸ் மற்றும் எவின் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் எவின் லூயிஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் சார்லஸுடன் இணைந்த ரஹ்மனுல்லா குர்பாஸும் அதிரடியாக விளையாட அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. இதில் இருவரும் அரைசதம் கடந்து ஆசத்தியதுடன் இரண்டாவது விக்கெட்டிற்கு 120 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர். அதன்பின் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 67 ரன்களில் ஜான்சன் சார்லஸ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 6 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 66 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். இறுதியில் ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 19 ரன்களையும், ரொமாரியோ ஷெஃபெர்ட் 28 ரன்களையும் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தனர்.
இதன்மூலம் கயானா அமேசன் வரியார்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. ராங்பூர் ரைடர்ஸ் தரப்பில் கலெத் அஹ்மத், தப்ரைஸ் ஷம்ஸி, இஃப்திகார் அஹ்மத் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ரைடர்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் இப்ராஹிம் ஸத்ரான் 5 ரன்களுக்கும், சௌமியா சர்க்கார் 13 ரன்களுக்கும், கைல் மேயர்ஸ் 5 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த சைஃப் ஹசன் - இஃப்திகார் அஹ்மத் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்,
இதில் அரைசதம் அடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சைஃப் ஹசன் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 41 ரன்களையும், இஃப்திகார் அஹ்மத் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 46 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் இஸ்லாம் அன்கொன் 30 ரன்களைச் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அமேசன் வாரியர்ஸ் தரப்பில் டுவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுகளையும், இம்ரான் தாஹிர் மற்றும் குடகேஷ் மோட்டி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
Also Read: LIVE Cricket Score
இதன்மூலம் கயானா அமேசன் வரியர்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் ராங்பூர் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், நடப்பு குளோபல் சூப்பர் லீக் தொடரில் சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹ்மனுல்லா குர்பாஸ் ஆட்டநாயகன் விருதையும், தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இம்ரான் தாஹிர் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.