ஹைதராபாத்தின் தொடக்க வீரர்களை காலி செய்த பிரேஸ்வெல்; வைரல் காணொளி!
16ஆவது ஐபிஎல் தொடரின் 65ஆவது லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை எதிர்த்து பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற்றால் சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு உறுதியாகும் என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூ பிளெசிஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் சார்பாக அபிஷேக் சர்மா - ராகுல் த்ரிப்பாட்டி கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. இந்த கூட்டணி முதல் 3 ஓவர்களுக்கு நிதானமாக ஆடியது. ஆனால் பார்னல் வீசிய 4ஆவது ஓவரில் ராகுல் த்ரிப்பாட்டி ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சரை விளாசினார்.
பின்னர் அபிஷேக் சர்மாவும் ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் விளாசப்பட்டது. இதன் காரணமாக ஆர்சிபி அணி உடனடியாக சுழற்பந்துவீச்சாளார் மைக்கேல் பிரேஸ்வெல்லை அட்டாக்கில் கொண்டு வந்தது. அவர் வீசிய முதல் பந்திலேயே அபிஷேக் சர்மா கவர் பாய்ண்ட் திசையில் நின்றிருந்த லோம்ரோரிடம் கேட்ச் கொடுத்து 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனையடுத்து 3ஆவது பந்திலேயே ராகுல் திரிப்பாட்டியும் 15 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணி சிக்கலில் சிக்கியது. 3 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேஸ்வெல் மிரட்டினார். இந்நிலையில் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பிரேஸ்வெல்லின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.