ஐபிஎல் 2023: க்ரீன், சூர்யா அதிரடி வீண்; அர்ஷ்தீப் சிங் வேகத்தில் மும்பையை வீழ்த்தியது பஞ்சாப்!
ஐபிஎல் தொடரில் இன்றைய லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அண்கள் பலப்பரீட்சை நடத்தின. மும்பை வான்கடே மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. பஞ்சாப் அணிக்காக மேத்யூ ஷார்ட் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் இன்னிங்ஸை தொடங்கினர். இதில் ஷார்ட், 11 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
பத்து ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் எடுத்திருந்தது பஞ்சாப். அங்கிருந்து 92 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் ஹர்ப்ரீத் சிங் பாட்டியா மற்றும் கேப்டன் சாம் கர்ரன். 28 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விக்கெட்டை இழந்தார் ஹர்ப்ரீத். 29 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த சாம் கர்ரனும் 19-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார்.
கடைசி ஓவரில் 17 ரன்கள் சேர்த்தது பஞ்சாப் அணி. 7 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து மிரட்டினார் ஜிதேஷ் சர்மா. ஹர்ப்ரீத் ப்ரார் தன் பங்கிற்கு ஒரு பவுண்டரி விளாசினார். இதன்மூலம் 20 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 214 ரன்கள் எடுத்தது . அர்ஜுன் டெண்டுல்கர், பெஹ்ரன்டோர்ஃப், கேமரூன் கிரீன், ஜோஃப்ரா ஆர்ச்சர் என மும்பை அணியின் நான்கு பவுலர்கள் தலா 40 ரன்களுக்கு மேல் கொடுத்திருந்தனர்.
இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷான் கிஷன் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இருவரும் அதிரடியாக விளையாடி மும்பை அணியின் ஸ்கொரும் மளமளவென உயர்ந்தது. அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா 27 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 44 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்ததுடன், அரைசதம் அடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டார்.
இதையடுத்து கேமரூன் க்ரீனுடன் இணைந்த சூர்யகுமார் யாதவ் தனது பழைய ஃபார்முக்கு திரும்பி, பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித் தள்ளினர். இதற்கிடையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேமரூன் க்ரீன் தனது இரண்டாவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்த கையோடு, 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 67 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
அவரைத் தொடர்ந்து 23 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 57 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதனால் கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணியின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவி என்ற நிலை ஏற்பட்டது.
பஞ்சாப் தரப்பில் 19ஆவது ஓவரை நாதன் எல்லீஸ் வீச, அதனை எதிர்கொண்ட டிம் டேவிட் ஒரு சிக்சர் உள்பட 13 ரன்களையும், திலக் வர்மா 2 ரன்களையும் சேர்க்க, மும்பை இந்தியன்ஸுக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.
பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் கடைசி ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், முதல் பந்தில் ஒரு ரன்னும், இரண்டாவது பந்தை டாட் பந்தாகவும், மூன்றாவது பந்தில் திலக் வர்மாவின் விக்கெட்டையும் கைப்பற்ற, அடுத்த பந்தில் நேஹல் வஹேராவின் ஸ்டம்புகளையும் தகர்த்து மிரட்டியதுடன், அந்த ஓவரில் வெறும் 2 ரன்களை மட்டுமே கொடுத்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. பஞ்சாப் தரப்பில் அபாரமாக பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு உதவினார்.