ஐபிஎல் 2023: தூபே போராட்டம் வீண்; மீண்டும் சிஎஸ்கேவை வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

Updated: Thu, Apr 27 2023 23:14 IST
IPL 2023: Rajasthan Royals defeated CSK by 32 runs! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய 37ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல் அணியும் மோதின. ஜெயப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜாஸ் பட்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 8ஆவது ஓவரில் இவர்களின் பாட்னர்ஷிப்பை ஜடேஜா பிரித்து பட்லரை 27 ரன்களுடன் வெளியேற்றினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் பெரிய அளவில் சோபிக்காமல் 17 ரன்களுடன் நடையைக்கட்டினார். 

இருப்பினும் மறுமுனையில் அதிரடி காட்டிய யஷஸ்வி ஜெய்ஷ்வால் 43 பந்துகளில் 77 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அதன்பின் தேவ்தட் படிக்கல், துருவ் ஜூரல் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்த போராடினர். துருவ் ஜூரல் 2 சிக்சர்களை அடித்து அதிரடி காட்டினாலும் ரன்அவுட்டாகி ஏமாற்றமளிக்க இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 202 குவித்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் 5 பவுண்டரி, ஒரு சிக்சர் என 47 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

இதையடுத்து அஜிங்கியா ரஹானே களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். அப்போது ஆட்டத்தின் 11ஆவது ஓவரை வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் அந்த ஓவரின் முதல் பந்திலேயே அஜிங்கியா ரஹானேவை வீழ்த்தினார். 

அதனைத் தொடர்ந்து இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அம்பத்தி ராயுடு சந்தித்த இரண்டாவது பந்திலேயே ரவிச்சந்திரன் ஆஸ்வின் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த மொயீன் அலி - ஷிவம் தூபே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

பின் 2 சிக்சர், 2 பவுண்டரி என 23 ரன்களை எடுத்திருந்த மொயீன் அலி ஆடம் ஸாம்பாவிடம் விக்கெட்டை இழந்தார். ஆனாலும் தனது அதிரடியை நிறுத்தாத ஷிவம் தூபே 29 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். 

ஆனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 37 ரன்களை தேவைப்பட்டது.  ராஜஸ்தான் தரப்பில் குல்தீப் யாதவ் வீசிய அந்த ஓவரில் சிஎஸ்கே அணியால் வெறும் 4 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

ராஜஸ்தான் அணி தரப்பில் ஆடம் ஸாம்பா 3 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியதுடன், மீண்டும் புள்ளிப்பட்டியளில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை