ஐபிஎல் 2023: லக்னோவை 154 ரன்களில் சுருட்டியது ராஜஸ்தான்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேலும், மூன்றாண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்துள்ளார்.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். தொடக்கம் முதலே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், முதல் விக்கெட்டுக்கு 82 ரன்களை பார்ட்னர்ஷிப்பும் அமைத்தனர்.
அதன்பின் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேஎல் ராகுல் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ஆயூஷ் பதோனி ஒருரன்னிலும், தீபக் ஹூடா 2 ரன்களிலும் என அடுத்து விக்கெட்டுகளை இழந்து நடையைக் கட்டினர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கைல் மேயர்ஸ் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ் - நிக்கோலஸ் பூரன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிக்கு சவாலான இலக்கை நிர்ணயிக்க உதவினர். இருப்பினும் இன்னிங்ஸின் கடைசி ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 21 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 28 ரன்களிலும் தனது விக்கெட்டை இழந்தனர்.
இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களைச் சேர்த்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.