தோனியின் கடைசி ஐபிஎல் என்பதால் இந்த சீசன் சிறப்பாக இருக்கும் - மேத்யூ ஹைடன்!
ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் வரும் மார்ச் 31ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், நான்கு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இப்போட்டிக்கான பயிற்சியில் சிஎஸ்கே அணி தற்போதிலிருந்தே ஈடுபட்டு வருகிறது.
அதேசமயம் இத்தொடருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுவதால், இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இந்நிலையில்,இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் மகேந்திர சிங் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கலாம் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை விளையாடிய ஐபிஎல் சீசன்களைக் காட்டிலும் இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு செயல்களையும் சிறப்பாகவும், தனித்தன்மையுடனும் செய்கின்றனர். துரதிருஷ்டவசமாக அவர்களால் இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும், அவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விளையாடி சாம்பியன் பட்டம் வென்றது அனைவரும் எதிர்பார்க்காத ஒன்று. அவர்களுக்கென்று தனி வழி உள்ளது.
மகேந்திர சிங் தோனி அணிக்கு புத்துணர்ச்சி கொடுத்து அணியைப் பலப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அணிக்கு அவர் புது மாதிரியான வடிவத்தைக் கொடுத்துள்ளார். அணியில் உள்ள சில வீரர்கள் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ள போதிலும், அவர்கள் அணியில் இருந்த பழைய வீரர்கள் பலரைத் தக்கவைத்துள்ளனர்.
மகேந்திர சிங் தோனியின் சிறப்பான இந்த ஐபிஎல் பயணம் முடிவுக்கு வர இருப்பதாக நான் நம்புகிறேன். அவர் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அவருடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவருடைய ஸ்டைலில் ஐபிஎல் போட்டிகளிலிருந்து விடைபெறுவார். அவர்களது ரசிகர்களும் அதனையே விரும்புவார்கள். மகேந்திர சிங் தோனியைப் பொருத்தவரை இந்த சீசன் போல வேறு எந்த ஐபிஎல் சீசனும் அவருக்கு சிறப்பாக இருக்கப் போவதில்லை என நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் அறிமுகமானது முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு சிறப்பாக அணியை வழிநடத்தி வருகிறார். தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 முறை ஐபிஎல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இரண்டு உலகக் கோப்பைகளை வென்று தந்த மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.