விக்கெட் விடாமல் நின்று ரன் சேர்க்கும் ஆங்கர் இன்னிங்ஸ் அவசியம் - விராட் கோலி!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதனிடையே லக்னோ அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டம் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது. பவர் பிளே ஓவர்களில் 25 பந்துகளில் 42 ரன்கள் குவித்த விராட் கோலி, அங்கிருந்து அரைசதம் அடிக்க 10 பந்துகளை எடுத்துக் கொண்டதாக கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் இறுதியாக 44 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து விராட் கோலி ஆட்டமிழந்தார்.
இதனால் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் குறித்த பேச்சுகளும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டிலும் ஆங்கர் ரோலில் விளையாடுவதற்கு தேவை இருப்பதாகவும், அது அவசியம் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா உடனான உரையாடலில் பேசும் விராட் கோலி, “டி20 கிரிக்கெட்டில் ஒரு பக்கம் விக்கெட் கொடுக்காமல் தேவையான நேரத்தில் அதிரடியாக ஆட வேண்டிய ரோல் முக்கியமானது என்றே நினைக்கிறேன். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆங்கர் ரோல் மிக அவசியம்.
ஏனென்றால் பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின், உடனே வீரர்கள் சிங்கிள் ரன்கள் ஓடுகிறார்கள் என்ற விமர்சிக்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. பவர் பிளே ஓவர்களில் விக்கெட் விழவில்லை என்றால், அடுத்த 2 ஓவர்களை அந்த அணியின் சிறந்த பந்துவீச்சாளர்கள் வீசுவார்கள். அப்போது அவர்களின் திட்டம் என்ன என்பதை அறிந்து ரன்கள் சேர்க்க வேண்டும். அதனால் அவர்களின் முதல் இரு ஓவர்கள் சில ரன்கள் எடுத்து, அதே பந்துவீச்சாளரின் கடைசி ஓவர்களில் அதிரடி காட்டுவோம். பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த பின் உடனடியாக விக்கெட் கொடுப்பது அணிக்கு பின்னடைவு தான்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ஆர்சிபி அணி மீதான அன்பு பற்றி விராட் கோலி பேசுகையில், “ஆர்சிபி அணியுடனான பயணத்தை நான் கொண்டாடுவதற்கு காரணங்கள் உள்ளன. அதற்கு ஆர்சிபி அணி நிர்வாகம் முதல் 3 ஆண்டுகளில் என் மீது வைத்த நம்பிக்கை தான். என்னை 3ஆம் ஆண்டு இறுதியில் ரீ டெய்ன் செய்வதற்கு முன், என்னை அதிகமாக நம்பினார்கள். அப்போதைய பயிற்சியாளர் ஜென்னிங்ஸிடம் நான் நேரடியாக சென்று 3ஆவது இடத்தில் பேட் செய்ய வேண்டும் என்று கேட்டேன். அதற்கு உடனே ஒப்புக் கொண்டு என்னை பேட் செய்ய வைத்தார்கள்” என்று தெரிவித்துள்ளார்.