ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி!

Updated: Sun, Apr 28 2024 20:56 IST
ஸ்டிரைக் ரேட் குறித்த விமர்சனம்; பதிலடி கொடுத்த விராட் கோலி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி சாய் சுதர்ஷன் மற்றும் ஷாருக் கான் ஆகியோரது அதிரடியான அரைசதங்களின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக சாய் சுதர்ஷன் 84 ரன்களையும், ஷாருக் கான் 58 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 24 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி, வில் ஜேக்ஸ் இணை அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் விராட் கோலி அரைசதம் அடிக்க, மறுபக்கம் அதிரடியாக விளையாடிய வில் ஜேக்ஸ் 41 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுடன் அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வில் ஜேக்ஸ் 5 பவுண்டரி, 10 சிக்ஸர்கள் என 100 ரன்களையும், விராட் கோலி 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 70 ரன்களையும் சேர்த்தனர். மேலும் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும் வில் ஜேக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். 

அதேபோல் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 44 பந்துகளில் 3 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 70 ரன்களை விளாசினார்.  இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 501 ரன்களையும் எட்டின்னார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் அதிக முறை 500 ரன்களை அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் வார்னருடன் இணைந்து முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய விராட் கோலி, தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம் என தனது ஸ்டிரைக் ரேட் குறித்து விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

போட்டி முடிவில் பேசிய விராட் கோலி, “நான் எனது ஸ்டிரைக் ரேட் பற்றி கவலைப்படவில்லை. ஏனென்றால் பலரும் எனது ஸ்டிரைக் ரேட் மற்றும் ஸ்பின்னர்களுக்கு எதிரான எனது ஆட்டம் குறித்து அதிகமாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை அணிக்காக வெற்றிபெற்று கொடுப்பதே முக்கியம். அதை தான் கடந்த 15 ஆண்டுகளாக செய்துகொண்டிருக்கிறேன்

என்னை விமர்சிக்கும் நீங்கள் இந்த சூழலை எதிர்கொண்டிருப்பீர்களா என்று தெரியவில்லை. தங்கள் சொந்தக் கருத்துகளை வெளியே உட்கார்ந்து யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், களத்தில் தினசரி அணிக்காக சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியும். அதன்படி அணியை வெற்றிபெற செய்வது தான் எப்போதும் எனக்கு முக்கியம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை