ஐபிஎல் 2024: பாரபட்சம் பார்க்காமல் வெளுத்து வாங்கிய மெக்குர்க்; மும்பை அணிக்கு 258 ரன்கள் இலக்கு!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற 43ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்ல் கேப்பிட்டல்ஸ் அணிக்கு ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் அபிஷேக் போரல் ஒருப்பக்கம் நிதானம் காட்டம், மறுமுனையில் எந்த பந்துவீச்சாளரையும் பாரபட்சம் பார்க்காமல் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாசி தள்ளினார். இதன்மூலம் 15 பந்துகளில் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து மிரட்டினார். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 92 ரன்களைக் குவித்தது. பின்னர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 84 ரன்களில் விக்கெட்டை இழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
பின்னர் மறுபக்கம் அதிரடி காட்டிய அபிஷேக் போரெலும் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 36 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஷாய் ஹோப் மற்றும் கேப்டன் ரிஷப் பந்த் இணை ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி வந்த ஷாய் ஹோப் 5 சிக்ஸர்களுடன் 41 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் ரிஷப் பந்துடன் இணைந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும், இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
அதேசமயம் ரிஷப் பந்த் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 29 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அடுத்து களமிறங்கிய அக்ஸர் படேல் தனது பங்கிற்கு 11 ரன்களைச் சேர்க்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 48 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்களைச் சேர்த்தது. மும்பை அணி தரப்பில் ஜஸ்ப்ரீத் பும்ரா, பியூஷ் சாவ்லா, முகமது நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.