மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; டூ பிளெசிஸிற்கு கொடுத்த தீர்ப்பு சரியா? - காணொளி!

Updated: Sat, May 18 2024 23:00 IST
மீண்டும் சர்ச்சையான மூன்றாம் நடுவரின் தீர்ப்பு; டூ பிளெசிஸிற்கு கொடுத்த தீர்ப்பு சரியா? - காணொளி! (Image Source: Google)

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி இன்று பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

இதில் விராட் கோலி 47 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட, மறுபக்கம் அரைசதம் கடந்த ஃபாஃப் டூ பிளெசிஸ் 54 ரன்கள் சேர்த்த நிலையில் எதிர்பாராத விதமாக ரன் அவுட்டனார். அதன்பின் களமிறங்கிய விரர்களில் ராஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி 41 ரன்களைச் சேர்த்தார். அதேசமயம் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 14, கிளென் மேக்ஸ்வெல் 16 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். 

இருப்பினும் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 38 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் சான்ட்னர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். 

இந்நிலையில் இப்போட்டியின் போது ஆர்சிபி அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் சர்ச்சைக்குரிய முறையில் விக்கெட்டை இழந்தார். அதன்படி இன்னிங்ஸின் 13ஆவது ஓவரை மிட்செல் சாண்ட்னர் வீச, அந்த ஓவரின் கடைசி பந்தை ராஜத் பட்டிதார் நேராக அடிக்க முயற்சித்தார். அச்சமயத்தில் பந்தை சரியாக கவனித்த மிட்செல் சாண்ட்னர் பந்தை லேசாக தொட்டதின் காரணமாக, அது மறுபக்கம் இருந்த ஸ்டம்புகளை தகர்த்தது. 

 

அச்சமயம் மறுமுனையில் இருந்த டூ பிளெசிஸும் க்ரீஸை விட்டு வெளியேறி மீண்டும் க்ரீஸை தொட முயற்சித்தார். இதனையடுத்து மிட்செல் சாண்ட்னர் நடுவரிடம் முறையிட்டார். அதன்பின் இதனை மூன்றாம் நடுவர் சோதித்து பார்த்த போது பந்து ஸ்டம்புகளை அடித்த போது டூ பிளெசிஸின் பேட் க்ரீஸுக்கு மேலே இருந்த காரனத்தினால் அவுட் என்ற தீர்ப்பை வழங்கினார். இருப்பினும் ஒரு கண்ணோட்டத்தில் டூ பிளெசிஸ் க்ரீஸை தொட்டுவிட்டது போன்று தெரிந்தது.

இதனல் ஃபாஃப் டூ பிளெசிஸிற்கு மூன்றாம் நடுவர் வழங்கிய தீர்ப்பானது சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும் இக்காணொளியும் இணையத்தி வைரலாகி வருகிறது. இந்நிலையில் இலக்கை நோக்கி விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது பவர் பிளேவிற்குள்ளேயே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை