ஸ்லோ ஓவர் ரேட்; ஷுப்மன் கில் உள்பட அணி வீரர்கள் அனைருக்கும் அபராதம் விதித்தது பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதன்படி நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 231 ரன்களைச் சேர்த்தது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் ஷுப்மன் கில் 104 ரன்களையும், சாய் சுதர்ஷன் 103 ரன்களையும் சேர்த்தனர். சிஎஸ்கே அணி தரப்பில் துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டேரிம் மிட்செல், மொயீன் அலி இணை அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தாலும், மற்ற வீரகள் சோபிக்க தவறினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்களைச் சேர்த்தது. இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கேவை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இப்போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அணியின் கேப்டன் ஷுப்மன் கில்லிற்கு ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேற்கொண்டு அணி வீரர்கள், இம்பேக்ட் பிளேயர் உள்பட அனைவருக்கும் தலா ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்திலிருந்து 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாகவும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.