ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பதிலடி கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Sun, Apr 21 2024 23:07 IST
ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பதிலடி கொடுத்தது குஜராத் டைட்டன்ஸ்! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடரானது முதல் பாதியைக் கடந்து தற்போது இரண்டாம் பாதியை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற 37ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. சண்டிகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து குஜராத் அணியை பந்துவீச அழைத்தது. இதையடுத்து களமிரங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் சாம் கரண் மற்றும் பிரப்ஷிம்ரன் சிங் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 

இப்போட்டியில் அதிரடியாக விளையாடி வந்த பிரப்ஷிம்ரன் சிங் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 35 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பௌ தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ரைலீ ரூஸோவ் 9 ரன்களோடு நடையைக் கட்ட, மறுபக்கம் 20 ரன்களைச் சேர்த்த நிலையில் கேப்டன் சான் கரணும் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா இப்போட்டியிலாவது அணியை கரைசேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 13 ரன்களோடு பெவிலியன் திரும்பினார்.

பின்னர் அணியின் நம்பிக்கை நாயகர்களான லியாம் லிவிங்ஸ்டோன், அஷுதோஷ் சர்மா மற்றும் ஷஷாங்க் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 99 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் பாடியா மற்றும் ஹர்ப்ரீத் பிரார் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின் அதிரடியாக் அவிளையாடிய ஹர்ப்ரீத் பிரார் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 29 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஹர்ஷல் படேலும் முதல் பந்திலேயே நடையைக் கட்ட, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்ப்ரீத் பாட்டியா 14 ரன்களைச் சேர்த்த நிலையில் ரன் அவுட்டானார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளையும், மோஹித் சர்மா, நூர் அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் அணிக்கு ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் விருத்திமான் சஹா 13 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஷுப்மன் கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷுப்மன் கில் 35 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அதிரடி வீரர் டேவிட் மில்லரும் 4 ரன்களோடு பெவிலியன் திரும்பினார். அதன்பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷன் 31 ரன்களுக்கும், அஸ்மதுல்லா ஒமர்ஸாய் 13 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தார். 

அதன்பின் இணைந்த ஷாருக் கான் - ராகுல் திவேத்திய இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்கமல் இருந்த ராகுல் திவேத்தியா 7 பவுண்டரிகளுடன் 36 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை