ஐபிஎல் 2024: சுதர்ஷன், ஷாருக் அதிரடியில் 200 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ்!
17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 45ஆவது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். இதில் விருத்திமான் சஹா 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார்.
பின்னர் ஷுப்மன் கில்லுடன் இணைந்த சாய் சுதர்ஷன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். இருவரும் தொடர்ந்து பவுண்டரிகள் அடிக்காமல் நிதானமாக விளையாடி வந்ததன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி பவர்பிளே முடிவில் 42 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அதன்பின் அதிரடியாக விளையாட முயற்சித்து தூக்கி அடித்த ஷுப்மன் கில் 16 ரன்களோடு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தார். பின்னர் இணைந்த தமிழக வீரர்கள் சாய் சுதர்ஷன் மற்றும் ஷாரூக் கான் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்சர்களையும் விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷாரூக் கான் 25 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இப்போட்டியில் 30 பந்துகளில் 3 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 58 ரன்களை எடுத்திருந்த ஷாரூக் கான் தனது விக்கெட்டை இழந்தார். இருப்பினும் மறுபக்கம் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்த சாய் சுதர்ஷன் தனது 6ஆவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
அவருக்கு துணையாக டேவிட் மில்லரும் பவுண்டரிகளை அடிக்க அணியின் ஸ்கோரும் 200 ரன்களை எட்டியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சாய் சுதர்ஷன் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 84 ரன்களையும், டேவிட் மில்லர் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 26 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் ஸ்வப்நில் சிங், முகமது சிராஜ், கிளென் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.