ஐபிஎல் 2024: வெற்றிக்கு பின் நிதீஷ், புவி, நடராஜனை பாராட்டிய பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற 50ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நிதிஷ் ரெட்டி 76 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 42 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கமே சொதப்பாலாக அமைந்தது. அணியின் நட்சத்திர வீர்ர்கள் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர். இதனையடுத்து ஜெய்ஸ்வால் - ரியான் பராக் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இருவரும் அரை சதம் விளாசி அசத்தினர். இதில் ஜெய்ஸ்வால் 67 ரன்களையும், ரியான் பராக் 77 ரன்களையும் சேர்த்து தங்களது விக்கெட்டை இழந்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹெட்மையர் 13 ரன்னிலும், துருவ் ஜூரெல் ஒரு ரன்னிலும் என வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
இதனால் கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில், கடைசி ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். முதல் பந்தை அஸ்வின் 1 ரன் எடுத்தார். 2-வது பந்தை பவல் 2 ரன்கள் எடுத்தார். 3-வது பந்தை பவுண்டரி விரட்டினார் பவல். இதனால் கடைசி 3 பந்தில் ராஜஸ்தானுக்கு 6 ரன்கள் மட்டுமே தேவைபட்டது. அடுத்த பந்தில் பீல்டிங்கின் தவறால் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. பரபரப்பான கட்டத்தில் 5ஆவது பந்தும் 2 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக பந்து வீசிய புவனேஸ்வர் குமார் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியின் வெற்றி குறித்து பேசிய சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ், “இது டி20 கிரிக்கெட்டின் மிகச்சிறந்த போட்டி. அந்த கடைசி பந்தில் ஒரு விக்கெட் எடுத்தால் வெற்றி பெறலாம் என்பதை மறந்துவிட்டேன். அதற்கு மாறாக நான் சூப்பர் ஓவருக்கு இந்த போட்டி செல்லும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இதில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். அதிலும் இன்னிங்ஸின் கடைசி பந்தை புவனேஷ்வர் குமார் சிறப்பாக வீசினார். இந்த போட்டியில் நாங்கள் மிடில் ஓவர்களில் சில விக்கெட்டுகளை எடுக்க முயற்சித்தோம்.
எங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் மிகச்சிறந்த யார்க்கர் பந்துகளை வீசுகிறார். அதன் காரணமாக ராஜஸ்தான் பேட்ஸ்மேன்களின் சில முக்கியமான விக்கெட்டுகள் கிடைத்தது. இந்த மைதானத்தில் சில போட்டிகளை விளையாடியுள்ளதால், 200 என்ற இலக்கை எளிதாக சேஸ் செய்ய முடியும் என்று நினைத்தேன். அதேபோல் பேட்டிங்கில் நிதிஷ் ரெட்டி சிறப்பாக விளையாடினார். அவர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படுவது மட்டுமின்றி ஃபீல்டிங் மற்றும் பந்துவீச்சிலும் சில ஓவர்களை வீசி தனது பங்களிப்பை தொடர்ந்து சிறப்பாக அளித்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.