ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு!

Updated: Sun, Apr 07 2024 17:20 IST
ஐபிஎல் 2024: டிம் டேவிட், செஃபெர்ட் அபார ஆட்டம்; டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு 235 இலக்கு! (Image Source: Google)

17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 20ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மும்பையிலுள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பந்து முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்கம் கொடுத்தனர்.

இதில் இன்னிங்ஸின் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா அடுத்தடுத்த ஓவர்களில் பவுண்டரியும், சிக்சர்களையும் விளாச முதல் 6 ஓவர்களில் மும்பை அணி 75 ரன்களைக் குவித்தது. இப்போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரோஹித் சர்மா தனது அரை சதத்தைப் பதிவுசெய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 49 ரன்கள் சேர்த்த நிலையில் அக்ஸர் படேல் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார்.

அவரைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இரண்டு பந்துகளை எதிர்கொண்ட நிலையில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர்களைத் தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிக் கொண்டிருந்த இஷான் கிஷான் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 42 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - டிம் டேவிட் இணை முதலில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், பின் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சற்று நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹர்திக் பாண்டியா 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 39 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் டேவிட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 2 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 45 ரன்களைக் குவிக்க, அவருக்கு துணையாக விளையாடிய ரொமாரியோ செஃபெர்ட் 10 பந்துகளில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 39 ரன்களை குவித்தார். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 234 ரன்களை குவித்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அக்ஸர் படேல் மற்றும் ஆண்ட்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 235 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை