என்னுடைய விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - ஹர்திக் பாண்டியா!

Updated: Tue, Apr 02 2024 11:58 IST
என்னுடைய விக்கெட் ஆட்டத்தை மாற்றிவிட்டது - ஹர்திக் பாண்டியா! (Image Source: Google)

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதுடன் நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. அதன்படி வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. 

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 34 ரன்களையும், திலக் வர்மா 32 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சஹால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர் ஆகியோரும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் களமிறங்கிய ரியான் பராக் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அரைசதம் கடந்ததுடன் இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் 5 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 54 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. அதேசமயம் மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் தங்களது மூன்றவாது தோல்வியைச் சந்தித்துள்ளது. 

இந்நிலையில் இத்தோல்வி குறித்து பேசிய மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா, “இன்றைய தினம் மிகவும் கடினமானது. நாங்கள் தொடங்க விரும்பியது போல் எங்களுக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. நான் அடித்து விளையாட விரும்பினேன். 150 முதல் 160 ரன்கள் வரை நாங்கள் எடுத்திருந்தால் அது ஒரு நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். ஆனால் என்னுடைய விக்கெட் அவர்களை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு சேர்த்துவிட்டது. நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக முயற்சி எடுத்து விளையாடியிருக்க வேண்டும்.

இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் இதுபோன்று ஆடுகளத்தை எதிர்பார்க்கவில்லை. ஆடுகளம் எப்போதும் ஒரு பேட்ஸ்மேனுக்கே சாதகமாக இருக்கும் என கூற முடியாது. இந்த ஆடுகளம் பந்து வீச்சாளர்களுக்கு நல்ல வகையில் உதவியாக இருந்தது. சில நேரங்களில் நீங்கள் எடுக்கும் சரியான முடிவிற்கு அதற்கான பலன் கிடைக்கும். சில நேரங்களில் கிடைக்காமல் இருக்கும். ஒரு அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நாங்கள் நம்புகிறோம். ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமான வகையில் சிறப்பாக விளையாடுவதுடன், அதிகமான தைரியத்தை வெளிப்படுத்துவதும் எங்களுக்கு அவசியம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை