ஐபிஎல் 2024: டூ பிளெசிஸ், கோலி அதிரடி; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி!

Updated: Sat, May 04 2024 23:13 IST
ஐபிஎல் 2024: டூ பிளெசிஸ், கோலி அதிரடி; குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அணி வெற்றி! (Image Source: Google)

விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கேப்டன் ஷுப்மன் கில் - விருத்திமான் சஹா ஆகியோர் தொடக்கம் கொடுத்தனர். 

இதில் ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் சஹா தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 2 ரன்களில் ஷுப்மன் கில்லும் நடையைக் கட்டினார். பின்னர் நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாய் சுதர்ஷனும் 6 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19 ரன்களுக்கே மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த ஷாருக் கான் - டேவிட் மில்லர் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர். 

இதில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 30 ரன்களைச் சேர்த்திருந்த டேவிட் மில்லர் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டர் ஷாருக் கானும் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் ராகுல் திவேத்தியா 30 ரன்களையும், ரஷித் கான் 18 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இதனால் குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆர்சிபி தரப்பில் யாஷ் தயாள், முகமது சிராஜ், வைசாக் விஜயகுமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் - விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து முதல் ஓவரில் இருந்தே வானவேடிக்கை காட்ட அணியின் ஸ்கோரும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதில் தொடர்ச்சியாக பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசிவந்த கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் 18 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 93 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் கேப்டன் டூ பிளெசிஸ் 10 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 64 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். 

இருப்பினும் ஆர்சிபி அணி முதல் 6 ஓவரிலேயே 93 ரன்களை விளாசிதன் கரணமாக இப்போட்டியை 10 ஓவர்களில் முடித்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பின்னர் களமிறங்கிய வில் ஜேக்ஸ் ஒரு ரன்னிலும், ராஜத் பட்டிதார் 2 ரன்களிலும், கிளென் மேக்ஸ்வெல் 4 ரன்களிலும், கேமரூன் க்ரீன் ஒரு ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தார். அதுமட்டுமின்றி அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலியும் அரைசதத்தை நெருங்கிய நிலையில் 2 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 42 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் ஆர்சிபி அணி 117 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இணைந்த தினேஷ் கார்த்திக் - ஸ்வப்நில் சிங் இணை சிறப்பாக விளையாடி அணியை கரைசேர்த்தனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த தினேஷ் கார்த்திக் 21 ரன்களையும், ஸ்வப்நில் சிங் 15 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை