ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி!

Updated: Sat, Mar 23 2024 19:22 IST
ஐபிஎல் 2024: சாம் கரண் அரைசதம்; டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் வெற்றி! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 2ஆவது லீக் போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை பேட்டிங்கை அழைத்தார். 

அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு மிட்செல் மார்ஷ் - டேவிட் வார்னர் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடியதுடன் சிக்சர்களும், பவுண்டரிகளுமாக விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 20 ரன்கள் எடுத்த நிலையில் மிட்செல் மார்ஷ் தனது விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டேவிட் வார்னரும் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 29 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். 

பின்னர் இணைந்த ஷாய் ஹோப் - கேப்டன் ரிஷப் பந்த் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இதில் அதிரடியாக விளையாட முயன்ற ஷாய் ஹோப் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 33 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட கேப்டன் ரிஷப் பந்த் தனது கம்பேக் ஆட்டத்தில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். 

இதனையடுத்து களமிறங்கிய ரிக்கி பூய் 03 ரன்களுக்கும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 05 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய அக்ஸர் படேலும் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 21 ரன்கள் எடுத்து ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அதேசமயம் இறுதியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் போரல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி தத்தளித்துக் கொண்டிருந்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மீட்டெடுத்தார்.

அதிலும் குறிப்பாக ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்களைச் சேர்த்து மிரட்டினார். இதன்மூலம் அபிஷேக் போரல் 10 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ஷிகர் தவான் - ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ஷிகர் தவான் 22 ரன்களில் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 9 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோவும் எதிர்பாராத விதமாக தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் இணைந்த பிரப்சிம்ரன் சிங் - சாம் கரண் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.

இதில் அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 26 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜித்தேஷ் சர்மாவும் 9 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 100 ரன்களில் 4 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் மறுபக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சாம் கரண் நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருக்கு துணையாக லியாம் லிவிங்ஸ்டோனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் கிங்ஸின் வெற்றியும் உறுதியானது. அதன்பின் 6 பவுண்டரி, ஒரு சிக்சர் என 63 ரன்கள் எடுத்த நிலையில் சாம் கரண் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஷஷாங் சிங்கும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். இதனால் கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த லியாம் லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 38 ரன்களைச் சேர்த்ததுடன் சிக்சர் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை